மலையாளப் பேரறிமுக நடிகர் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கிலும் சாதனை படைத்தது. 27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரண்டு ஏமாற்றுக்கார ஆண்கள், அவர்களையே ஏமாற்ற முயலும் இரண்டு பெண்களின் கதைதான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம். மலையாளப் பேரறிமுக நடிகர் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தமிழில் சாதனை படைத்தது. மலையாள கதைத்தலைவனான துல்கர் சல்மான், சென்னைப் பையன்தானாம். படிப்பு- படிப்பு காலத்தில் நண்பர்களோடான வழக்கமான குறும்பு எல்லாம் சென்னையில்தானாம். துல்கர் சல்மான் நடிப்பில் ஐந்து மாதங்களுக்கு முன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அழகான பெண்கள் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்மையில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப்படத்திற்கு தெலுங்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பால் அந்தத் தொலைக்காட்சியின் வரிசைப்பட்டியலில் 7.1 இந்தப்படத்திற்குக் கிடைத்தது. இதற்கு முன்பு வெளியான மற்ற மொழிமாற்றப் படங்கள் எல்லாம் 6 என்கிற அளவிலேயே தரவரிசை பெற்று வந்த நிலையில் முதல்முறையாக அவற்றை முந்தி துல்கர் சல்மான் படம் சாதனை படைத்துள்ளது. துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் இருவருமே நவீன தொழில்நுட்ப இளைஞர்கள். ஏமாற்றுவதே தொழிலாகச் சுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்போது, ரீத்து வர்மா மீது காதல் கொண்டு, தன் காதலைச் சொல்கிறார் துல்கர் சல்மான். அவரும் காதலை ஒப்புக்கொள்ள, இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். ரக்சனும், ரீத்து வர்மாவுக்கு தோழியாக வரும் நிரஞ்சனாவைக் காதலிக்கிறார். நால்வரும் நண்பர்களாகிறார்கள். அப்போது துல்கர் சல்மான் - ரக்சன் இருவருமே தொழில்நுட்பத்தை மையப்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது தெரியவருகிறது. அதில் ஒரு சம்பவத்தில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் பாதிக்கப்படுகிறார். அப்போது ஏன் இப்படியானது என்று விசாரிக்கத் தொடங்குகிறார். இருவரையும் கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் செய்தும் அவர்கள் தப்பிக்கிறார்கள். இதற்குப் பிறகு கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா, ரீத்து வர்மா என்ன ஆனார், காதல் கைகூடியதா என்பதை எல்லாம் மிகவும் சுவைபடச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. இயங்கலை வணிகம் மூலமாக நடக்கும் திருட்டு, கார் கதவை சாவி இல்லாமல் எப்படி திறக்கலாம், ரோல்ஸ் ராய்ஸ் காரில் உள்ள தொழில்நுட்பக் குளறுபடி என்பது போன்ற சில சுவைபாடுகளைக் கொண்டு, நல்லதொரு திரைக்கதை அமைத்து கைத்தட்டலை அள்ளுகிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி. ஒவ்வொரு காட்சிக்குமே அவர் சொல்லியிருக்கும் நுணுக்கங்கள் அட போட வைக்கின்றன. இப்படியெல்லாம் நமக்கு நடக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு இயங்கலையில் பொருள் ஏதேனும் வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை பண்ணப் போவது உறுதியே. தொழில்நுட்பத்தை மையப்படுத்தித் திருடும் இளைஞராக நடித்துள்ளார் துல்கர் சல்மான். அதற்கான நம்பகத்தன்மையை உருவாக்கும் விதத்தில் நிறைவாக நடித்துள்ளார். இவரது நண்பராக ரக்சன். முதல் படமாக இருந்தாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். கதைத்தலைவியாக ரீத்து வர்மா. முதலில் கொஞ்சம் சோகமாக இருக்கும் இவருடைய பாத்திர அமைப்பு பின்னால் இருக்கும் மாற்றம் என கச்சிதம். வெறும் காதல் காட்சிகள், பாடல்கள் என்றில்லாமல் முதன்மையான கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. இவருடைய தோழியாக இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா. இந்தப் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து கொண்டே முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். வசனங்கள் குறைவுதான் என்றாலும், சில காட்சிகள் கெத்தாக நின்று கொண்டு பார்வையில் பதில் சொல்லி மகிழ வைக்கிறார். இவர்களைத் தவிர்த்து படத்த்துக்கு மிகவும் சுவையூட்டுகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இவருடைய துப்பறியும் பாணி, நடை, உடை என முழு நடிகராக கவுதம் மேனன் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



