தமிழகத்தை சேர்ந்த 9 அகவை சிறுமி கமலியை பற்றிய குறும்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாபலிபுரத்தை சேர்ந்தவர் 9 அகவை தமிழ்ச் சிறுமி கமலி. சறுக்குப்பலகையை அசாத்தியமாக பயன்படுத்தும் திறன் கொண்டவர். கமலி பாவடை அணிந்து சறுக்குப்பலகையில் சாலையில் சறுக்கிச் சென்றபோது எடுத்த புகைப்படம் பிரபல சறுக்குப்பலகையாளர் டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது. காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக சறுக்குப்பலகையைப் பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்தப் புகைப்படத்தை பகிர கமலி உலக அளவில் பிரபலமானார். இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த சசா ரெயின்போ என்கிற இயக்குநர் தமிழகத்திற்கு வந்து கமலியை பற்றி 24 நிமிட குறும்படத்தை இயக்கினார். அந்த குறும்படம் கடந்த மாதம் நடந்த அட்லாண்டா திரை விழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை பெற்றது. கமலி, அவரின் தாய் சுகந்தி மற்றும் பாட்டியை பற்றிய அந்த குறும்படம் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 6 கிழமைகளில் படமாக்கப்பட்ட அந்தக் குறும்படம் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மும்பை சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,150.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.