Show all

என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி! கோடிக்கணக்கான நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட தமிழ்ப்பாடல்

‘என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி’ பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ளனர் இது இசைக் காணொளித் திரட்டாக வெளியாகியுள்ளது.

03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திரைப்படத்தில் வெளியாகாத ஒரு தமிழ்ப் பாடல் கோடிக்கணக்கான மக்களால் கவரப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அந்தப் பாடலின் எளிமையான தமிழ்ச் சொற்களும் இசையும் பாடலைப் பாடியவர்களும்தாம் காரணம் என்கின்றது சமூக வலைத்தளம்.

என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி, பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ளனர். 

இந்தத் தீ- கபாலி படத்தில் வரும் ‘கண்ணம்மா கண்ணம்மா’, இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, ‘மாரி 2’ படத்தில் ‘ரௌடி பேபி’, ‘ஜிப்ஸி’ படத்தில் ‘எங்கும் மாய ஊஞ்சல்’, ‘சூரரைப் போற்று’ படத்தில் ‘காட்டுப் பயலே’, ‘ஜகமே தந்திரம்’ படத்தில் ‘ரகிட ரகிட’ என வெற்றி பெற்ற பாடல்களைப் பாடியவர்.

சொந்தமாக ஒரு பாடல் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்பில், தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து, சந்தோஷ் நாராயணின் இசையில், ஏ.ஆர் ரகுமானின் கொண்டாட்டத் தளத்தின் கீழ் உருவானதுதான் இந்த ‘என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி’ பாடல். 

மீண்டும் மீண்டும் பொருள் புரிந்து இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்தால், சமூகவியல், சூழலியல், அறிவியல், இயற்கை, வலி என்று எல்லாம் கலந்த ஒரு கலவையாகத் தெரியும்.

பாடலின் தொடக்கமே குலவைச் சத்தமும் பறை இசையும் அசத்துகிறது. ‘நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக் கொடுத்தானே பூர்வக்குடி’ என்பதில் தொடங்கும் ஆழமான கருத்து, பாடல் முடியும் வரை அப்படியே தொடர்கிறது. 

‘பாட்டன் பூட்டன் காத்த பூமி, ஆட்டம் போட்டு காட்டும் சாமி, ராட்டினம்போல் சுத்தி வந்தா சேவ கூவுச்சி, அது போட்டு வச்ச எச்சமெல்லாம் காடா மாறுச்சி, நம்ம வீடா மாறுச்சி’ இந்த வரிகள் எல்லாம் இயற்கை அறிவியலை நமக்கு நினைவு படுத்தும். தமிழ்மொழி தெரியாதவர்களும் இந்தப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கி உள்ளனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.