11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் 50 ஏக்கர் பரப்பளவில் ‘இன்னோவேட்டிவ் பிலிம் சிட்டி’ உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தில் கன்னட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னட தனியார் ஒளியலைவரிசை ஒன்றில் ஒளிப்பரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக இங்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ரூ.3 கோடி செலவில் பெரிய வீடு கட்டப்பட்டது. நடிகர் சுதீப் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 10-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்று அந்த வீட்டில் தங்கினர். 100 நாள் வரை நடந்த இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இந்த வீடு பூட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டின் தொழில்நுட்ப அறை, மெழுகு சிலைகளால் உருவாக்கப்பட்ட பகுதி என தீ வேகமாக பரவியது. இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து பிடதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக பிலிம் சிட்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,707
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



