Show all

அழகிரியைத் தொடர்ந்து சீமான்! நடிகர் விஜய், பிகில்பட தயாரிப்பு நிறுவனம், நிதிநிறுவனர் ஆகியோர் மீதான வருமானவரி துறை அதிரடி குறித்து

நடிகர் விஜய், சார்ந்த வருமான வரி சோதனை குறித்து, அழகிரியைத் தொடர்ந்து சீமான் கருத்து:- ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு ஏன்? எல்லாம் அரசியல்தான் வீராங்கா என்கிறார் சீமான்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகரின் வீட்டில் (ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு) வருமான வரித்துறை அதிகாரிகள் ஏன் சோதனை நடத்தவில்லை என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். 

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும், தஞ்சை மாவட்டத்தை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சீமான் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

இரண்டு கோரிக்கைகள் முதல்வரிடம் முன்வைத்தோம். இரண்டையும் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார் என்று தான் முதல்வரைச் சந்தித்தது பற்றி தெரிவித்தார் சீமான்.
 
இதையடுத்து அவரிடம் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்து சீமான் பேசுகையில், விஜய்யை விட அதிக சம்பளம் வாங்குற நடிகர் யார்ன்னு உங்களுக்குத் தெரியும். ஒரு படத்திற்கு மட்டும், சரக்கு சேவைவரியுடன் சேர்த்து ரூ.126 கோடியை ஒருவர் சம்பளமாக வாங்கி உள்ளார். அடுத்த படத்துக்கும் வாங்கியிருக்கிறார். அவர் வீட்டுக்கு ஏன் வருமான வரித்துறை அதிகாரிகள் செல்லவில்லை? 66 லட்சம் வரி பாக்கி கட்டணும் என்று அந்த நடிகருக்கு இருந்தது. அதையும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. 

ஆனால் விஜய்க்கு இது நடக்கிறது.  விஜய்யை இதன் மூலம் மிரட்டி அச்சப்படுத்த நினைக்கிறார்கள். இவர் நல்லவர், அவர் கெட்டவர் என்று நினைக்க வைக்கின்றார்கள் . வரி பாக்கி வைத்திருந்தவர், 3 ஆண்டுகள் எனக்குப் படவாய்ப்பில்லை என்றார். அவர் ஓய்வுக்காக நடிக்காமல் இருந்தாரா? பணத்தை வட்டிக்கு விட்டதாகத் தெரிவித்திருந்தாராம். 18விழுக்காடு என்பது அநியாய வட்டியில்லையா? எனக்குத் தெரிந்து அன்புச்செழியன் இப்போது திரைப்படம் எடுக்க வட்டிக்குப் பணம் கொடுப்பதில்லை. நான் எடுக்கும் படத்திற்கு பணம் தரக் கேட்ட போது மறுத்து விட்டார். 

நடிகர் விஜய்க்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. அவருக்கு இளைஞர்கள், மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவரை அச்சப்படுத்த நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் இறக்கிவிடும் ஆளுக்கு விஜய் போட்டியாக வந்து விடக்கூடாது என நினைக்கிறார்கள் இவ்வாறு கூறினார் சீமான். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என ரஜினி கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான். அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும். நாம் நம்பித்தான் ஆக வேண்டும். இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, மனித குலத்திற்கே எதிரானது. காடுகளில் வாழும் பழங்குடியினர் என்ன ஆவணங்களை வைத்திருப்பார்கள்? நாடு முழுவதும் உள்ள பிச்சைக்காரர்கள், சாலைவாசிகளிடம் ஆவணங்கள் எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் திரைப்படங்கள் இருக்கிற நிலையில், இலாபம் சம்பாதித்ததாகவும், வரிஏய்ப்பு செய்ததாகவும், அதுவும் மக்கள் அன்பு பாராட்டும் இடத்தில் இருக்கிற விஜய் மீது களங்கம் என்பதை மக்கள் நம்பவில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.