சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு பாடலுக்கு எதிரான புகாரை ஏற்று கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஒரு பாடலுக்கு எதிரான புகாரை ஏற்று கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு முன்பே வெளியாகின. இதில் ஒரு பாடலில், சாதிச் சிக்கலைத் தூண்டும் விதமான வரிகள் வருவதாக கூறி, சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில், தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சூரரைப்போற்று படத்தில் வரும் “மண் உருண்ட மேல மனுச பையன் ஆட்டம் பாரு” என்று தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ளே ஒடுறது சாக்கடையா? அந்த மேல் சாதிகாரனுக்கு இரண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் வருகின்றன. அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில், இதுபோன்ற பாடல் வரிகள் தவறான எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்தச் சிக்கலைப் பெரிதாக்கலாம். அதனால் இரண்டு ஆண்டுகளுக்குச் சூரரைப்போற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ஆறுமாதங்களுக்கு முன்பே தர்மபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு அஞ்சல் மூலம் புகார் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனு அறங்கூற்றுவர் ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அணியமான வழக்கறிஞர் ஜெய்சிங், ‘புகார் கொடுத்து 5 மாதங்கள் கடந்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். அரசு தரப்பில் ஆணியமான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகேயன், ‘தர்மபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பளருக்கு புகார் வந்து சேரவில்லை’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த அறங்கூற்றுவர், “மனுதாரர் மீண்டும் புகார் மனுவை காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். அவர் அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



