பொதுமக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட, பெருமைக்குரிய பழநதமிழர் இலக்கியத்தின் பெயரைத் தாங்கிய படமான நெடுநல்வாடை: பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது. 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலக வரலாற்றில் பொதுமக்களிடம் நிதி திரட்டி பொதுமக்களின் பங்களிப்பில் உருவான முதல் படம் நெடுநல்வாடை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,143.
ஆரியர் வருகைக்கு முந்தைய கால- பழந்தமிழர் இலங்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியன.
பத்துப்பாட்டில் பத்து தொடர் பாடல்களும், எட்டுத் தொகை நூல்களில் புறநானூறு, அகநானூறு உள்ளிட்ட எட்டு இலக்கியங்களும் அடங்கும்.
பத்துப்பாட்டு நூல்களில் ஒரு தொடர்பாடல்தான் நெடுநல்வாடை. பாண்டிய வேந்தன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு புலவர் நக்கீரரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.
நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை மற்றவர் அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது.
ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
இத்துனைச் சிறப்பு பொருந்திய நெடுநல்வாடை என்று பெயரைத்தான் இந்தப் படத்திற்குச் சூட்டியிருக்கிறார்கள்.
பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் இந்த 'நெடுநல்வாடை'.
பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 'நெடுநல்வாடை' படம் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது. இந்த விழாவில் போட்டிக்கு 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.