Show all

பிக்பாஸ் நிகழ்ச்சிப் போக்கே மாறியிருந்திருக்கும்! போற்றிக் கொண்டிருந்தால், லாஸ்லியா சேரப்பாவை, புன்னை மரம் போல

தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும், காதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் காதலை சிறந்த கவிதையாக, போற்றிக் கொள்ளும் இலக்கியமாக, அழகியலாக முன்னெடுத்துள்ளன. அந்தப் பாங்கில் அமையவில்லை கவின்- லாஸ்லியா காதல்.

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகநானூற்றில் ஒரு பாடல் உண்டு! ஒரு தலைவன் தன் தலைவியைச் சந்திக்க எங்கு வர வேண்டும் என்று கேட்பான்? அதோ அங்கே தெரியும் புன்னை மரத்தடியில் சந்தித்து நாம் உரையாடுவோமா என்று கேட்பதற்கு தலைவி சொல்வாள். அந்தப் புன்னை மரத்தடியில் மட்டும் வேண்டாம். ஏனென்றால் என் சிறிய அகவையில் ஒருமுறை நான் விளையாடிக்கொண்டிருக்கும் போது இந்தப் புன்னை சிறு செடியாக இருக்கக் கண்டேன். அதை என் அன்னையிடம் சொன்னேன். அவள் என்னைப் பார்த்து, 'இந்தப் புன்னை மரமே இனி உன் தங்கை. உன் தங்கையைப் போல இதைப் பேணி வளர்க்க வேண்டும் என்றார்கள். அன்று முதல் நான் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் புன்னைச் செடிக்கும் நீர் ஊற்றி வந்தேன். இன்று பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. வளர்ந்து நிற்பது மரமல்ல. என் தங்கை. என் தங்கையின் முன்னே நாம் காதல்மொழி பேசுவது தகுமா? என்று வெட்கத்துடன் கேட்பாள் தலைவி.

காதலில் கண்ணியம் இருக்க வேண்டும். தலைவன் தலைவியின் உறவை திருமணம் வரை களவு என்றும், திருமணத்திற்குப் பிறகு கற்பு என்றும் தலைப்பிட்டு அழைக்கும் தமிழ் இலக்கியங்கள். பிக்பாஸ் போட்டியாளர்களான, லாஸ்லியா- கவின் காதல், இந்த வரையரைகளைத் தாண்டியது. 

பிக் பாஸ் வீட்டில் இந்தக் கிழமை போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துச் செல்கின்றனர். அந்த வகையில் முந்தாநாள் லாஸ்லியாவின் குடும்பத்தார் வந்திருந்தனர். அப்போது லாஸ்லியாவின் நடவடிக்கைகளால் வெளியில் பெரும் அவமானமாக இருப்பதாக அவரது பெற்றோர் வருத்தப்பட்டனர். மறைமுகமாக கவினுடனான காதலை முறித்துக் கொள்ளும்படி அவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில் நேற்று வந்த சேரன் மகள், லாஸ்லியாவைப் பற்றி அவருக்கு எடுத்துரைத்தார். லாஸ்லியாவுடன் இனி பேசக்கூடாது என அவர் தெரிவித்தார். அதோடு, அப்படிப் பேசினால் இனி தான் பேச மாட்டேன் எனவும் அவர் செல்லமாக கோபித்துக் கொண்டார். மகளின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், அதனை சேரனும் ஏற்றுக் கொண்டார்.

எல்லோரையும் காயப்படுத்தி விட்ட இந்தப் போக்கை மாற்றி, கவின்- லாஸ்லியா தங்கள் காதலை ஓர் உன்னத இலக்கியமாக்கியிருக்கலாம். சாக்சியை விரட்டியடித்திருக்க வேண்டாம். ஒட்டு மொத்த பிக்பாஸ் நிகழ்ச்சியையே தமிழ்இலக்கியமாக முன்னெடுக்க ஆற்றுப்படுத்திய மதுமிதாவை காயப்படுத்தியிருக்க (உண்மையான காயம்) வேண்டாம். சேரனை போலிப்பாசத்திற்கு மதிப்பளிக்க வைத்து வீணடித்திருக்க வேண்டாம். அசிங்கம் பிடித்த கலாச்சாரத்தை பையன்கள் குழுவோடு சேர்ந்து அரங்கேற்றியிருக்க வேண்டாம். லாஸ்லியா ஈழத்துத் தமிழ்ப் பெண் என்பதால், தமிழர்கள் எதிர்பார்த்த கோணமே வேறு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,274.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.