Show all

ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் வருமானத்திற்கு, வரியை கணக்கிட்டு கட்டுவதில், முன்னெடுக்கப்பட்ட குழப்பம்! வழக்காகியிருக்கிறது

வருமான வரி கணக்கிடுவது, கட்டுவது எல்லாம் அவரவர்கள் நியமித்துக் கொண்ட கணக்காய்வாளர்கள்தாம். இது போன்ற மக்கள் போற்றும் கலைஞர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் ஏன் கணக்காய்வாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பது விவரமறிந்தவர்களிள் கேள்வியாக உள்ளது.

26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உலா வருபவர் ஏ.ஆர். ரகுமான். ஆஸ்கார் விருது வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர் தான். தற்போது பல முன்னணி மின்மினிகள் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்காக அழைப்புஒலி (ரிங்டோன்) இசையமைத்து கொடுத்ததற்காக கிடைத்த வருமானம் 3 கோடியே 47 லட்சம் ரூபாயை ஏஆர்ஆர் அறக்கட்டளைக்கு திருப்பி விட்டபடியால் அந்த வருமானத்திற்கு ரஹ்மான் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளார். 

அதை அங்கீகரிக்காத வருமான வரித்துறை சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணை இன்று வந்த போது அறங்கூற்றுவர்கள் இது தொடர்பாக ஏ.ஆர் ரஹ்மான் பதிலளிக்க கவனஅறிக்கை அனுப்ப உத்தரவிட்டு இருக்கின்றனர். அதன்பிறகு விசாரணை வேறெரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரித்துறை சார்பில் அணியமான டி.ஆர்.செந்தில்குமார், இந்த தொகை ஏ.ஆர்.ரகுமானால் தான் பெற்றுக்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். வருமான வரி பிடித்தம் போக மீதம் இருக்கும் தொகையை ரஹ்மான் தன் அறக்கட்டளைக்கு அனுப்பிக்கொள்ளலாம். ஆனால் அதை நேரடியாக அறக்கட்டளை மூலமாக பெற கூடாது என்று விவாதிக்கிறார். 

ஆனால், ஏ.ஆர் ரஹ்மான் அறக்கட்டளைக்கு வரும் பணத்திற்கு வருமான வரி விலக்குகளுக்கான அனுமதி பெறப்பட்டு இருக்கிறது. அதனாலேயே நேரடியாக அறக்கட்டளைக்கு தொகையை ஒதுக்கிவிட்டதாக  ஏ.ஆர் ரஹ்மான் தரப்பு வாதம் அமைந்தள்ளது. 

முரசு கட்டில் அரசு மரியாதைக்கு உரிய பொருள். ஆனால் அந்த முரசு கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்ட புலவருக்கு வியர்க்கிறதே என்று கவரி வீசிய தமிழ்மன்னன் ஆண்ட மண் இது. அந்த மண்ணில் மக்கள் போற்றும் கலைஞனுக்கு வரிக்குழப்பத்திற்கு அறங்கூற்றுமன்ற கவனஅறிக்கை என்பது நெருடலான நிகழ்வாக இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.