தமிகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்தித் திரைப்பாடல்களே ஒலித்த காலம்தான், இளையராசாவின் இசையில் உருவான அன்னக்கிளி திரைப்படத்திற்கு முந்தைய காலம். ஹிந்தித் திரைப்பாடல்களை, துண்டைக் காணோம்- துணியைக் காணோம் என்று தனக்கு வசமான இசையால் விரட்டி அடித்தவர்தான் இளையராசா! தமிழகத்து இசையை வசமாக்கிக் கொண்ட அவர், ஏனோ தமிழகத்துப் பண்புகளை வசமாக்கிக் கொள்ள மறுத்து வருகிறார். 14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொன்னூற்று ஆறு, படத்தில் தன் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தவறான செயல், அது ஆண்மையில்லாத்தனம் என்று இசையமைப்பாளர் இளையராசா பேசி, தமிழகத்து பண்பை ஏற்றிக் கொள்ளாத போக்கில், தொடர்ந்து உலா வந்து கொண்டிருக்கிறார். இசையமைப்பாளர் இளையராசாவின் பேச்சுகள் மீண்டும், மீண்டும் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அவரது பாடல்களுக்கான உரிமத்தொகை குறித்த பேச்சு எழும் போதெல்லாம் அது குறித்து காட்டமான விமர்சனங்களையே இளையராசா வைத்து வருகிறார். இளையராசாவின் காட்டமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை 96 திரைப்படத்தில் இளையராசாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்த கேள்விக்கு, இளையராஜா அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியாகி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற 96 திரைப்படத்தில் இளையராசாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தான கேள்விக்கு பதிலளித்த இளையராசா, அங்கீகரிக்க முடியாத அசிங்க அசிங்கமான பேச்சுக்களை களம் இறக்கியிருக்கிறார். வேண்டாம் இளையராசா! உங்கள் புலமைக்கு தமிழ் மண் ஏராளமாக பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து விட்டது. உங்களைத் தமிழ்மண்ணின் சொத்தாக்கிக் கொள்ள உரிய விலை கொடுக்கப் பட்டு விட்டது. தயவு கூர்ந்து நன்றியில்லா வணிகனாக தொடர்ந்து உங்களைப் பேரம் பேசிக் கொண்டிருக்காதீர்கள்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,166.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.