Show all

நல்ல நடவடிக்கை! நீட் அசிங்கத்தில் மனம் நொந்து போனநிலையில் நல்லசேதி! வாழ்க நம் காவல்துறை

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநரான முள்ளுப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம அகவை28 அடிக்கடி செல்பேசியில் பேசியவாறு பேருந்தை இயக்குவதாகப் பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

   இந்நிலையில், பொள்ளாச்சியில் இருந்து மீனாட்சிபுரத்திற்கு பேருந்தை புதன்கிழமை மாலை இயக்கிச் சென்ற முருகானந்தம் செல்பேசியில் பேசுவதைப் பயணிகளில் சிலர் தங்கள் செல்பேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளனர். இந்த ஆதாரத்துடன் பொள்ளாச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

   இதையடுத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர் கதிரவன், உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோரை அழைத்து,

ஓட்டுநர் முருகானந்தத்தை வியாழக்கிழமை ஒருநாள் முழுவதும் காந்தி சிலை முன்புள்ள சைகையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்துமாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தினார்.

  அதன்படி, வியாழக்கிழமை காலையில் இருந்து மாலை வரை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் முருகானந்தம் ஈடுபடுத்தப்பட்டார். இந்த தண்டனை மூலம் அவர் போக்குவரத்து விதிகளை மதிக்கக் கற்றுக்கொள்வார் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காப்பி அடித்து விடுவார்கள் என்று, முன்னெச்சரிக்கையென்று மூக்குத்தியை அகற்றுவதும், துப்பட்டவை மறுப்பதும். ஒரு தேர்வு மையத்தில், இருபத்தைந்து பெண்களை உள்ளாடையை அகற்றச் சொன்ன அசிங்கம், அதற்கு மேலும், ஆண் தேர்வாளர்களின் அருவருப்பான பார்வை என்று.... கோபம் கோபமாக வருகிறது. 

இந்த நிலையில் ஓட்டுநருக்கு நமது காவல்துறை வழங்கிய கண்ணியமான தண்டனை பாராட்டிற்குரியது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,784. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.