Show all

நடிகை சித்ரா தற்கொலைப்பாட்டில் கணவர் ஹேம்நாத் கைது!

நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் அவரது கணவர் ஹேம்நாத் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த புதன் கிழமை அன்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் மின்மினி உணவகத்தில் பேரறிமுக சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். 

சித்ரா கொண்டாடிகள் யாருக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டதை நம்பஇயலாமலே இருந்து வந்தது. மேலும் இது திட்டமிட்ட கொலையாகவே இருக்கக்கூடும், சித்ரா அவ்வளவு கோழை மனம் படைத்தவர் அல்ல என்கிற அங்கலாய்ப்பு தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இது சித்ரா மரணப்பாட்டில் யாரும் கைது செய்யப்படாதது குழப்பத்தையும் ஐயத்தையும் ஏற்படுத்துவதாகவே இருந்தது. இதில் வேறு கணவர் ஹேம்நாத் குறித்து தவறான பதிவுகள் நிறைய வெளியாகின. 

இந்த நிலையில் தனியார் உணவகத்தில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சித்ராவும், ஹேம்நாத்தும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

சித்ரா படப்பிடிப்பில் இருந்தபோது, ஹேம்நாத் குடித்துவிட்டு அடிக்கடி சென்று சச்சரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சித்ராவின் தாயாரும் ஹேம்நாத்தை விட்டுப் பிரிந்து வருவதே சித்ராவிற்கு பாதுகாப்பு என்று அடிக்கடி சித்ராவுக்கு அறிவுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவுத் திருமணம் செய்து கொண்டது சித்ராவுக்கு பெரிய சட்டச்சிக்கல் நெருக்கடியையும் சேர்ந்து விட்ட நிலையில், உருவான மனஉளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். சித்ராவின் மரணத்துக்கு ஹேம்நாத் தான் காரணம் என்று சித்ராவின் தாய் விஜயா உட்பட பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.