வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, ஒரு கவர்ச்சியான நிதி ஊக்கத்தொகை உங்களுக்கு வழங்கப்பட்டால், உங்கள் பெயரை மாற்றிக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை. 01,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: என்னுடைய பெயரே மாற்றப்பட்ட பெயர்தான். யாரும் இதுவரை வைத்துக் கொண்டிராத பெயராக தெரிவு செய்து அமைத்துக் கொண்டது மூன்றாவது நோக்கம். கணியக்கலை அடிப்படையில் தனிமுடிவு மற்றும் போரியல் என்கிற இயல்புக்கு உரிய எண் ஒன்பதில் என்னுடைய பெயரை அமைத்துக் கொண்டேன். அது இரண்டாவது நோக்கம். முதல் நோக்கம் என்னுடைய பெயர் தனித்தமிழில் இருக்க வேண்டும் என்பது. என்னுடைய பிள்ளைகளுக்கு அழகிய தனித்தமிழில் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறேன். உறவினர் பலரின் குழந்தைகளுக்கும் அழகிய தனித்தமிழ் பெயர்களை சூட்டியிருக்கிறேன். கேட்கும் நண்பர்களுக்கு அழகிய தனித்தமிழ் பெயர்களை பரிந்துரை செய்திருக்கிறேன். அனைத்து பெயர்களும் கணியக்கலை அடிப்படையில் இயல்புகளையும் தெரிவு செய்தே. இந்த நோக்கங்களுக்கு மாறுபாடு இல்லாமல் என்பெயரை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நான் ஏற்றுக் கொள்வேன். பணம் எனக்குத் தரவேண்டாம். நான் பரிந்துரைக்கிற ஓர் தமிழ் அமைப்புக்கு ஒரு இலட்சத்திற்கு குறையாமல் பணம் கொடுக்க வேண்டும். இப்போதைக்கு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறைக்கு நன்கொடை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,040.