Show all

நியூயார்க் நகரில் பேரறிமுகமாகி வருகிறது! மோடியைக் கண்டித்து உலாவரும் எண்ணிமத்திரை கருத்துப்பரப்புதல் வண்டி

அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் நியூயார்க் நகரில் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. அமெரிக்காவில் மோடியைத் திறனாய்வு செய்து எண்ணிமத்திரை பொருத்திய வாகனத்தில் கருத்துப்பரப்புதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பாகி வருகிறது.

அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோடி சென்று இருக்கிறார். செவ்வாய்கிழமை நியூயார்க் நகருக்கு சென்றடைந்த அவர் நாளை வரை அங்கு தங்கி இருக்கிறார். இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் ஐந்து முறை அமெரிக்காவுக்கு அவர் பயணித்து உள்ளார். பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் என 3 அதிபர்கள் அமெரிக்காவில் மாறிவிட்ட நிலையில், தற்போது அவர் மேற்கொண்டு இருப்பதே முதல் அரசு முறை பயணமாகும். இந்தப் பயணித்தில் அமெரிக்க அரசின் விருந்தாளியாக அவர் கருதப்பட்டு உயரிய தகுதிகளுடன் அவர் கவனிக்கப்படுவார். 

முதலில் நியூயார்க் நகருக்கு சென்ற மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்கள், தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்தை வழங்க உள்ளார். இந்த நிலையில் இந்தியத்தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 

இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மதவாத மோதல்கள், இணையதள முடக்கம், கருத்து சுதந்திரம் பறிப்பு, இதழியல் சுதந்திர பறிப்பு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்ற பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களுக்கு முன்- இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, வெள்ளை மாளிகை இரவு விருந்தில் பங்கேற்க இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் என்ற அமைப்பு அமெரிக்காவில் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. 

இந்த நிலையில் இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், கருத்து சுதந்திரம், மத சுதந்திரம் பறிப்பு போன்றவை குறித்து இந்தியத்தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அமெரிக்காவை சேர்ந்த செனடர்கள் உட்பட 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அமெரிக்க செனடர் கிரிஸ் வான் ஹோலென் மற்றும் அதன் பேராளர் பிரமிளா ஜெயபால் தலைமையிலான இந்த குழுவில், ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உட்பட 18 செனடர்கள், 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். 

இதற்கிடையே இந்தியத்தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை கண்டித்து அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் எண்ணிம திரை பொருத்திய வாகனத்தில் கருத்துப்பரப்புதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்கள், அரசியல் தலைவர்களால், விழிப்புணர்வு கருத்துப்பரப்புதல் செய்யப்படும் இந்த வாகனம் நியூயார்க் நகரில் மிகவும் பேரறிமுகமாகியுள்ளது.

இதில் இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்களை சுட்டிக்காட்டி மோடியை விமர்சித்து உள்ளனர். காட்டமாக மோடியை, 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என அதில் திறனாய்வு செய்யப்படுகிறது. ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 2005 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நரேந்திர மோடி ஏன் அமெரிக்காவுக்கு வர தடை விதிக்கப்பட்டது? எந்த விசாரணையும் இல்லாமல் ஏன் மாணவர் சங்க தலைவர் உமர் காலித் 1000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்? என பல்வேறு கேள்விகள் அதில் எழுப்பப்பட்டு உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,653.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.