Show all

நடப்புத் தேர்வு போர்ச்சுக்கல்! வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவின் வருமானவரியால், ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்களை வருமானவரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நிறுத்தப்படுவது மக்களை பணத்தீண்டாமைக்கு நிர்பந்திக்கிறது. எல்லையில்லா வருமானம் தரும் கருவி உழைப்பு மேலோங்கியுள்ள இன்றை சமூகத்தில், ஒரு எல்லைக்கு மேல் வருமானத்தை கட்டுப்படுத்த முடியாது. அப்படியானவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விரும்புகின்றனர் என்று ஆய்வுத் தரவுகள் நிறுவுகின்றன. 

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் இருக்கும் பல பணக்காரர்கள் இந்திய குடியுரிமையை விட்டுவிட்டு வெளிநாட்டுக் குடியுரிமை பெற மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதனால், வெளிநாட்டில் குடியுரிமை பெறும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் நடப்பு காலகட்டத்தில் உலகில் பல நாடுகள் முதலீட்டு அடிப்படையில் குடியுரிமை சேவையும், வாய்ப்புகளையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 

இந்தியாவின் பணக்காரர்கள், முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள், முதலீட்டு வங்கியாளர்கள் எனப் பலர் வெளிநாட்டில் குடியுரிமை வாங்குவதை முதன்மையான விடையமாகக் கருதுகின்றனர். 

இந்தியாவைக் காட்டிலும் சிறப்பாகக் கிடைக்கும் வணிக வாய்ப்பு, உயர் தர கல்வி, உயர் தர மருத்துவம், மேம்பட்ட வாழ்க்கை சூழ்நிலை எனப் பல வகையில் வெளிநாட்டுக் குடியுரிமை பயன்படும் காரணத்தால் மிகவும் ஆர்வமுடன் இந்திய குடியுரிமை விடுத்து வெளிநாட்டுக் குடியுரிமை பெறுகின்றனர் இந்தியப் பணக்காரர்கள்.   

அந்த வகையில் போர்ச்சுகல் நாட்டில் 50க்கும் அதிகமான சொத்து மதிப்புடைய இந்தியர்கள் 3.5 லட்சம் முதல் 6 லட்சம் யூரோ வரையிலான தொகையை முதலீடு செய்து கடந்த 18 மாதத்தில் லிஸ்பென் மற்றும் பிற முக்கியப் பகுதிகளில் வீடு, அடுக்குமனை குடியிருப்புகள் வாங்கிக் குவித்து வருகின்றனர். 

போர்ச்சுகல் நாட்டில் மனைத்துறையில் முதலீடு செய்து ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிழமை என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தங்கினால் குடியுரிமை பெற தகுதி அடைய முடியும். இது பிற வழிகளைக் காட்டிலும் எளிய வாழியாகப் பணக்காரர்கள் பார்க்கிறார்கள். 

போர்ச்சுகல் நாட்டின் பொன்-வருகைஇசைவு (கோல்டன்விசா) அதாவது சொத்து முதலீட்டு வாயிலாகப் பெறப்படும் வருகைஇசைவைப் பெற இந்தியர்கள் ஓரே நேரத்தில் மொத்த பணத்தையும் அனுப்பாமல் இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி அளிக்கும் 'தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும்' திட்டத்தின் வாயிலாக ஒரு ஆண்டிற்கு 250000 டாலர் அளவிலான தொகை பல்வேறு பகுதியாகச் செலுத்துகின்றனர். 

ஐரோப்பாவில் வாழ்க்கை தொடங்க பிற நாடுகளை ஒப்பிடுகையில் போர்ச்சுகல் சிறப்பானதாக உள்ளது குறிப்பாகக் கல்வி, நலங்குப் பிரிவில் இந்தியர்களுக்கு மிகவும் ஏதுவாக விளங்குகிறது. மனைத்துறை முதலீட்டை முடித்து மொத்தமாகச் சொத்துக்களைக் கைப்பற்றிய பின்பு தான் வருகைஇசைவுக்கான அனுமதி கிடைக்கும். 

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி மும்பையில் பேரளவு வீட்டில் அனைத்து வசதிகளைக் கொண்டு இருந்தாலும், இந்தியாவில் கொரோனா தொற்று மோசமான நிலையை அடைந்த போது குடும்பத்துடன் பிரிட்டன் நாட்டுக்குச் சென்றார். இது மட்டும் அல்லாமல் கதவடைப்பு முடிந்த பின்பு லண்டனுக்கு அருகில் உள்ள பிரிஸ்டோல் பகுதியில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்து ஸ்டோர்க் பார்க் என்ற 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்த வீட்டை வாங்கி மும்பையில் இருக்கும் அன்டாலியா வீட்டுக்கு இணையான அழகியல் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. 

முகேஷ் அம்பானி இனி வரும் காலத்தில் இந்தியாவை விடவும் பிரிட்டனில் தான் அதிகப்படியான நேரம் குடியிருப்பார், இது 2வது வீடு மட்டும் அல்லாமல் முகேஷ் அம்பானி குடிபெயர வாய்ப்பு அதிகமாக உள்ளது என செய்திகள் வெளியான போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதை மறுத்தது. 

இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி அமெரிக்கா, துபாய் எனப் பல நாடுகளில் மனைத்துறை சொத்துக்களில் முதலீடு செய்து வருகிறார். இது மட்டும் அல்லாமல் சிங்கப்பூரில் முகேஷ் அம்பானி தனது குடும்ப நிறுவனத்தை மனைத்துறைப் பிரிவில் அண்மையில் தொடங்கினார்.

இந்தியாவின் வருமானவரியால், ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்களை வருமானவரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நிறுத்தப்படுகிற முன்னெடுப்பு- மக்களை பணத்தீண்டாமைக்கு நிர்பந்திக்கிறது. 

எல்லையில்லா வருமானம் தரும் 'கருவிஉழைப்பு' மேலோங்கியுள்ள இன்றைச் சமூகத்தில், ஒரு எல்லைக்கு மேல் வருமானத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அப்படியானவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற விரும்புகின்றனர் என்று ஆய்வுத் தரவுகள் நிறுவுகின்றன. இந்தியா ஒட்டுமொத்தமாக வருமான வரியை அகற்றுவது இந்தியாவில் பணக்காரர்களை தக்கவைப்பதற்கான தீர்வாக அமைய முடியும். வருமான வரியை அகற்றுவதால் அரசுக்கு வளர்ச்சியே அன்றி தளர்ச்சி ஒருபோதும் இல்லை என்பதை பல வருமான வரி இல்லாத நாடுகளைப் பொறுத்திப்பார்த்தால் ஏற்றுக் கொள்ள முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,419.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.