Show all

உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்! இளையராஜா அவர்களின் 75-வது பிறந்த ஆண்டை, பவள விழா ஆண்டாக உலகம்முழுவதும்

22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் 75-வது பிறந்த ஆண்டை, பவள விழா ஆண்டாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில், இளையராஜா கலந்து கொண்டார். அவரிடம் மாணவிகள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு இளையராஜா அளித்த பதில்களும் வருமாறு:

(?)கல்லூரிக்கு சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டா?

(!)படிக்கும் படிப்புக்கும், செல்லும் வேலைக்கும், வாழும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. நான் படிப்புக்காக எந்த கல்லூரிக்கும் போனதில்லை. அதுதான் இங்கு வந்து விட்டேனே. இதுபோல் பல கல்லூரிகளுக்கு போய்க்கொண்டிருக்கிறேன்.

(?)இசையமைப்பாளராக ஆகாமல் இருந்திருந்தால்.

(!)இசைக்கலைஞராக இருந்திருப்பேன். அதுவும் இல்லையா...நான் வேறு என்னவாகி இருந்தால், நீங்கள் மகிழ்ந்திருப்பீர்கள். 

(?)நீங்கள் முதலில் சென்ற வெளிநாடு எது,? அங்கு கிடைத்த மறக்க முடியாத அனுபவம் பற்றி கூற முடியுமா.

(!)அன்னக்கிளி, பத்ரகாளி, தீபம் ஆகிய 3 படங்களுக்கு இசையமைத்த பிறகு மலேசியாவுக்கு ஒரு கச்சேரிக்காக சென்றேன். 10 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த மேடையில், பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் என்னை மட்டம்தட்டிப் பேசியது மறக்க முடியாத நிகழ்வு

(?)சென்னைக்கு எப்போது வந்தீர்கள்.

(!)1968 மார்ச். நாள் ஞாபகம் இல்லை.

(?)யாரிடம் ஆட்டோகிராப் வாங்க நினைக்கிறீர்கள்.

(!)இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணாவை சந்தித்து ஆசிர்வாதமும், அன்பையும் பெற வேண்டும் என விரும்பியிருக்கிறேன். அவரது அன்பையும் பெற்றுள்ளேன்.

(?)பல இசைக்கருவிகளை வாசிக்கும் உங்களுக்கு பிடித்த இசைக்கருவி எது.

(!)என் மனம்தான் எனக்கு பிடித்த இசைக்கருவி. என்னிடம் மட்டுமல்ல் உங்கள் எல்லோரிடமும் இது இருக்கிறது. அந்த அற்புதமான சொத்தை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள். அப்படி செய்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். சரியான பாதையில் பயணிக்க முடியும்.

(?)வெள்ளை ஆடைக்கு மாறியது ஏன்.

(!)மூகாம்பிகை பக்தனாக மாறிய தருணம். இனி இதுதான் நமக்கான ஆடை என்று முடிவெடுத்தேன். அதுவரை, அந்தந்த காலகட்டத்தில் வரும் எல்லா வகையான ஆடைகளையும் அணிந்திருக்கிறேன்.

(?)யாருடன் இணைந்து இணையர் பாடல் பாட விரும்புகிறீர்கள்.

(!)ஆஷா போஸ்லே சிறந்த பாடகி. அவர் வந்து விட்டாலே எனக்கு கற்பனைகள் பெருக்கெடுக்கும். ஒரு பாடல் பதிவு செய்ய வந்தால், அந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாதே என்று மேலும் 2 பாடல்களை பாட வைத்துவிட வேண்டும் என்று நினைப்பேன். இவ்வாறு இளையராஜா பதில் அளித்தார்.

மனயங்கத்து சுப்பிரமணியன் விசுவநாதன் அல்லது ம.சு.விஸ்வநாதன், தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இளையராஜாவை விட பதினைந்து அகவை மூத்தவரான இவர், கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள். 

ம.கோ.இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார்.

தனது நான்காவது அகவையிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருட்டிணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்பு படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13வது அகவையிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி.கே.ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள்

உடல்நல குறைவு காரணமாக, சி.ஆர்.சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள்.

தேவதாஸ் (தமிழ் மற்றும் தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். 

விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 

இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் சித்ராலயா கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது.

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். 

வி.குமார், இளையராஜா, அ.இ.ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார். 

ஆஷா போஸ்லே, மராத்;தி மொழிக்குச் சொந்தக்காரர். அவர் இளையராஜாவை விட பத்து அகவை பெரியவர். அவர் பல துறைகளில் திறமை கொண்டவராக இருந்தாலும், வடக்கத்திய திரையுலகில் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ் பெற்றவராவார். அவர் தமது பத்தாம் அகவையிலேயே தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார். இன்று வரை தமது சேவைகளை அளித்து வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000க்கும் மேற்பட்ட வடக்கத்திய திரைப் படங்களில் பாடியதோடு, அவர் பாடிய பல இசைத்தட்டுக்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. அவர் பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.

தெற்காசிய நாடுகளில் போஸ்லே அவர்கள் மிகவும் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் பாடகியாவார். அவரது திறமை திரைப்படப்பாடல்கள், போப் இசை, கஜல் வழிப்பாடல்கள், பஜனைப்பாடல்கள், பாரம்பரிய இந்திய மரபார்ந்த இசை, நாட்டுப்பாடல்கள், கவ்வாலிப்பாடல்கள், ரபீந்திர சங்கீதம் மற்றும் நஜ்ருல் கீதி பாடல்கள் அனைத்திலுமே பளிச்சென்று வெளிப்படுவதாகப் பாராட்டப் படுவார். அவர் 14 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார், அவற்றில் தமிழ், ஆஸ்ஸாமீஸ், ஹிந்தி, உருது, தெலுங்கு, மராத்தி, பெங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம், ரஷ்ய மொழி, செக் மொழி, நேபாளி, மலாய் மொழி மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் அடங்கும். போஸ்லே அவர்கள் 12,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளதாக அறியப்படுகிறது. 

தமிழகத்தில் மிக உயரமாக வளர்ந்த தமிழர்கள், இன்னொரு தமிழனை அடையாளப் படுத்துவது, அங்கீகரிப்பது என்பதை மேற்கொள்வதேயில்லை. இளையராஜாவுக்கும் ஒரு மலையாளியையும், மராட்டியையும் தாம், தம்மை விட உயரமாக வைத்துப் பார்க்க முடிந்திருக்கிறது. அவர் சமகாலத்தில் அவர் வளர்ச்சிக்கு யாரெல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை அவர் வாயால், எந்தக் கேள்வியாலும் வெளிக்கொணர முடியவில்லைதாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,024.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.