Show all

நம்ம மோடி முதல் ஆளாகச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதா? சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் இனி சுற்றுலா போகலாம்: நாசா

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, இனி தனியாரும் சுற்றுலா போகலாம் என்றும்,  30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த நிலையில், சுற்றுலா ஆர்வக்காரர் ஆன நம்ம மோடி, முதல் ஆளாக செல்வாரா என்று இணைய ஆர்வலர்கள் கேள்வி எழுப்புவது இணையத்தில் தீயாகி வருகிறது.

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விண்வெளி ஆய்வு மையத்திற்கு விஞ்ஞானிகள் சென்று வர ரஷ்ய ராக்கெட்டுகளையே நாசா பயன்படுத்தி வந்தது. இந்த ஒப்பந்தம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே முடிந்து விட்ட நிலையில், அண்மைக் காலமாக நாசா, விஞ்ஞானிகள் யாரையும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து செல்லவில்லை. 

இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் நாசா ஒப்பந்தம் போட்டுள்ளது.  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் வணிகமாகவும் தொடங்க நாசா திட்டமிட்டு அறிவிப்பும் செய்துள்ளது. 

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா, இனி தனிநபர்களையும் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், முதல் சுற்றுலா பயணத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நாசா நேற்று வெளியிட்டது. 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா சென்று, திரும்புவதற்கான கட்டணம் 58 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடி). சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 டாலர்கள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பராமரிக்கவும், அடுத்த ஐந்து ஆண்டில் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் அதிகமான தொகை செலவழிக்கப்படுவதால், தனியார் நிறுவன வணிகத்திற்கு நாசா அனுமதி அளித்துள்ளது.

விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதற்கு ஆண்டுக்கு 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். விண்வெளி மையத்திற்கு சுற்றுலா செல்ல விண்ணப்பிப்பவர்களுக்கு நாசா பல ஆண்டுகளுக்கு முன்பே அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் டேனிஸ் டிடு முதல் ஆளாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னமேயே விண்ணப்பித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் விண்ணப்பித்துள்ளனர். 

தற்போது நம்ம மோடி, இரண்டாவது முறையாகவும் இந்தியத் தலைமை அமைச்சராகியுள்ளதால், தமது சுற்றலாவை இன்னும் சிறப்பாக கலக்கும் முகமாக, இந்த விண்வெளி ஆய்வு மையச் சுற்றுலாவிற்கு விண்ணப்பித்து விட்டாரா? இன்னும் இல்லையா? என்ற ஆர்வக் கேள்வி இணைய ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,177.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.