Show all

யார் கேட்டார்கள் இந்த நீலநிற சரிபார்ப்புக் குறி! கீச்சுவுக்கு எதிராக வரிப்பந்தாட்ட வீராங்கனை காட்டம்

ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்தத் தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் நீலநிற சரிபார்ப்புக் குறியை இழக்கவும் தயாராக உள்ளனர். 

18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கீச்சு நிறுவனத்தை, பேரறிமுக தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கிய பின்னர் நீலநிற சரிபார்ப்புக் குறி பயனர்கள் ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்தார்.   

ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்தத் தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் நீலநிற சரிபார்ப்புக் குறியை இழக்கவும் தயாராக உள்ளனர். 

உலகின் முன்னணி சமூக வலைதளமான கீச்சுவைத் தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்தியரான தலைவரை அதிரடியாக நீக்கியது, போலி கணக்குகளை கண்டறிந்து அதனை நீக்குவது உள்பட பல்வேறு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் கீச்சுவில் பேரறிமுகங்கள் வைத்திருக்கும் நீலநிற சரிபார்ப்புக் குறி கணக்குகளுக்கு மாதம் எட்டு டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 650 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என முந்தாநாள் இரவு அதிகாரப்பாடாக எலான் மஸ்க் அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நீலநிற சரிபார்ப்புக் குறி பயனாளிகள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருசிலர் நீலநிற சரிபார்ப்புக் குறி வசதியை இழக்கவும் தயாராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் முன்னாள் வரிப்பந்தாட்ட (டென்னிஸ்) வீராங்கனை மார்ட்டினா நவ்ரதிலோவா, நீலநிற சரிபார்ப்புக் குறி தனக்குத் தேவையில்லை என்றும் அதற்காக பணம் கட்ட முடியாது என்றும் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மார்ட்டினா நவரதிலோவா, நான் நீலநிற சரிபார்ப்புக் குறி வசதியை கேட்கவே இல்லை என்றும், திடீரென ஒருநாள் தானாகவே என் பக்கத்தில் அது தோன்றியது, எனக்கு நீலநிற சரிபார்ப்புக் குறி வசதி தேவை இல்லை என்றும், அதற்காக நான் பணம் செலுத்த தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நீலநிற சரிபார்ப்புக் குறியை என்னுடைய கீச்சுக் கணக்கில் இருந்து அகற்றினாலும் எனக்கும் என்னைப் பின்தொடர்வோருக்கும் எந்தவிதச் சிக்கலும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பேரறிமுக எழுத்தாளர் ஸ்டீபன் கிங், நீலநிற சரிபார்ப்புக் குறி வசதிக்கு பணம் தண்டல் செய்வதற்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவ்வப்போது புதிய செய்திகளை பதிவிடும் தங்களுக்கு கீச்சு நிறுவனம் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

எலான் மஸ்க்கின் நீலநிற சரிபார்ப்புக் குறி கட்டண அறிவிப்பு குறித்து அவரிடமே கீச்சு மூலம் பல பயனாளர்கள் கடுமையாக திறனாய்வு செய்தனர் என்பதும் ஆனால் அந்த அனைத்து திறனாய்வுகளையும் எலான் மஸ்க் கண்டுகொள்ளாமல், 'கீச்சு நிறுவனத்தை வெறும் விளம்பர வருமானத்தை வைத்து மட்டுமே நடத்த முடியாது என்றும் சிறப்பான சேவையை செய்ய வேண்டும் என்றால் கட்டணம் தண்டித்தான் ஆக வேண்டும் என்றும் தனது அறிவிப்பை நியாயப்படுத்தினார். 

பல பேரறிமுகங்கள் நீலநிற சரிபார்ப்புக் குறி கட்டணத்திற்காக தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் இந்த கட்டணத்தை எலான் மஸ்க் முற்றாக நீக்குவாரா? அல்லது குறைப்பாரா? என்கிற வினாக்கள் விடைக்குக் காத்திருக்கின்றன. விடையளிக்க வேண்டியது எலான் மஸ்க்தான்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,422.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.