Show all

இந்திய மீனவர் படகுகளை திரும்பக் கொடுக்க மாட்டோம்; இலங்கை அமைச்சர்

இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் மீன்பிடி வள்ளங்களும் உபகரணங்களும் எக்காரணம் கொண்டும் திருப்பிக்கொடுக்கப்படமாட்டாது என இலங்கை மீன்பிடித் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

     இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த அமைச்சர் மகிந்த அமரவீர, மட்டக்களப்பு தருமபுரத்தில் கடல்வாழ் மீன்குஞ்சுகள் இனப் பெருக்க பண்ணைக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ள அவர், வடமாகாண கடலில் இந்திய மீனவர்களின் சட்ட விரோத மீன்பிடியினால் உள்நாட்டு மீன் வளம் அழிக்கப்படுவது மட்டுமன்றி சுற்றாடலுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை நிறுத்த இந்திய நடுவண் அரசு தலையீடு செய்ய வேண்டும் அல்லது ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் இது பற்றி பேச வருமாறு இந்திய நடுவண் அரசு அழைப்பும் விடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் மீனவர்களின் ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் பின் நிற்கப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஓன்றியம் விதித்துள்ள தடை நீக்கம் பற்றிய நல்ல செய்தியை எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக எதிர்பார்க்க முடியும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர நம்பிக்கையும் வெளியிட்டார்

இந்த நிகழ்வில் இராஜங்க அமைச்சர். எம். ஹிஸ்புல்லாஹ், மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.