Show all

வலையொளி காட்சிமடைகள் முடக்கம்! வதந்தி பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இருபதுகளுக்கு

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு செய்திகள் குறித்து மிகையான இட்டுக்கட்டிய தகவல்களை பதிவிட்டு வரும் மேலும் பத்தொன்பது வலையொளி காட்சிமடைகளும், மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.  

07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பாகிஸ்தானில்  நயா பாகிஸ்தான் என்ற பெயரில் வலையொளி காட்சிமடை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

நயா என்றால் என்ன? ஹிந்தி மாதிரி இருக்கிறதே என்றால், ஆம் உருதும் ஹிந்தியும் ஒருவருக்கொருவர் போசினால் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகைக்கு பேச்சு மொழி ஒன்றுதாம். எழுத்து மொழிதாம் வேறு. ஹிந்தியில் 'நயா பைசா' என்பதை நாம் புதிய காசு தமிழில் சொல்கிறோம் அல்லவா? நயா பாகிஸ்தான் என்றால் புதிய பாகிஸ்தான் என்று பொருள்.

20 லட்சம் பின் தொடர்பவர்களுடன் செயல்படும் அந்த வலையொளி காட்சிமடை பாகிஸ்தானின் உள்நாட்டு உளவுத்துறை உதவியுடன் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து பொய் செய்திகளை பதிவிட்டு வருகிறது. இதனால் ஹிந்தி பேசும் வட இந்தியர்களை இந்தப் பொய் எளிதாகச் சென்று வதந்தி பரப்பும். 

பண்பாடு கலாச்சாரத்தில், மேலும் மதத்தில் மாறுபட்ட இனங்கள் ஒரே மொழியைத் தொடர்பு மொழியாகக் கொண்டிருக்கும் போது தத்தம் இனமக்களை நிறைவாக வைத்துக் கொள்வதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் குறித்தும், அயோத்தியா உள்பட இந்தியாவின் உள்நாட்டு செய்திகள் குறித்தும் மிகையான இட்டுக்கட்டிய தகவல்களை பதிவிட்டு வருவதை அறிந்த ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா அந்தக் காட்சிமடையைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலையொளி நிர்வாகம் மற்றும் தொலை தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து நயா பாகிஸ்தான் வலையொளி காட்சிமடை முடக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் உள்நாட்டு செய்திகள் குறித்து மிகையான இட்டுக்கட்டிய தகவல்களை பதிவிட்டு வரும் மேலும் பத்தொன்பது வலையொளி காட்சிமடைகளும், மற்றும் இரண்டு இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.  

இந்தக் காட்சிமடைகளி மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 50 கோடி வரை இருக்கும் என்று ஒன்றியத் தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தலைமைஅமைச்சர் மோடி தலைமையில் ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் எண்ணிம ஊடக நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,105.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.