Show all

காலந்தவறாமை என்கிற நேரத்துல்லியத்தில்! உலக விமான நிலையங்களில் எட்டாவது இடம் சென்னைக்கு

உலக அளவில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்கள் பட்டியலில் சென்னைக்கு 8ஆம் இடம் கிடைத்துள்ளது நமக்கான பெருமிதம்.

18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னாட்டு அளவில் முடிந்துள்ள ஆண்டில் நேரம் தவறாது செயல்பட்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கொரோனா தொற்று விமான போக்குவரத்துத் துறையை உலக அளவில் சென்ற ஆண்டு நிலைகுலைய வைத்தது. அதற்கு முந்தைய ஆண்டில் தொற்று பாதிப்பு காரணமாக 36விழுக்காட்டு விமானங்கள் உலக அளவில் களைந்திடப்பட்டன. சென்ற ஆண்டு தொடக்கத்தில் விமான போக்குவரத்து துறை சற்று ஏற்றம் காணத் தொடங்கியது. பல நாடுகளில் இரண்டாவது அச்சுறுத்தல் இருந்தபோதிலும் 2.5 கோடி விமானங்கள் கடந்த ஆண்டில் இயக்கப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10 விழுக்காடு அதிகமாகும்.

இந்நிலையில் வீழ்ச்சி அடைந்துள்ள விமானத் துறையை மேம்படுத்துவதற்காக ஒரு ஆண்டாக விமான நிறுவனமான சிரியம் கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. விமானப் போக்குவரத்தில் காலதாமதம், விமான நிலையங்களின் செயல்பாடு, விமானத்திற்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் போன்றவற்றை காரணிகளாக கொண்டு உலக அளவில் தரவு கண்காணிப்பு நடத்தியது. அதில் காலம் தவறாமை எனும் பிரிவில் சென்னை விமான நிலையம் தேர்வாகியுள்ளது.

சென்னை விமான நிலையம் உலக அளவில் எட்டாவது நேரம் தவறாத விமான நிலையமாக விமான தரவு இணைய நிறுவனமான சிரியம் தெரிவித்துள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் 89.32 விழுக்காடு சரியான நேரத்தில் புறப்படுவதாகவும், வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இட்டாமி விமான நிலையம் 96.51 விழுக்காடு பெற்று முதல் இடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டில் 49,923 விமானங்கள் இயக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 70 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. முதல் நான்கு இடத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள விமான நிலையங்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவது இடத்தில் ரஷ்யாவின் செரெமெட்டியோ விமான நிலையம் உள்ளது. 

இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் 232,226 விமானங்களை கடந்த ஆண்டு இயக்கியுள்ளது. அதில் 87.6 விழுக்காட்டு விமானங்கள் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக சிரியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.