Show all

சிதம்பரம் ஆடலரசன் கோயில்!

தில்லை ஆடலரசன் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இந்தச் சிக்கலில்- ஆங்கில ஆட்சியில் இருந்த நிலைப்பாடும், தமிழ்நாடு விரும்பும் நிலைப்பாடும் மக்கள் சார்ந்து இருப்பதையும், ஒன்றியம் சார்ந்தவர்களின் நிலைபாடு தனிக்குழுசார்ந்;து இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. 

26,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: சிதம்பரம் ஆடலரசன் கோவிலின் கணக்குகள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை நடத்த அங்குள்ள தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோவில் மீது அறநிலையத் துறை கட்டுப்பாடுகளைச் செலுத்த முடியாது எனக் கூறுகின்றனர். 

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என சைவ சமய குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட கோவில் இது. ஒரே தருணத்தில் கட்டப்படாமல், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளது இந்தக் கோவில். 

தேவாரப் பாடல்களைப் பூட்டி வைத்ததுதான் இந்தக் கோவிலின் நிருவாகிகள் முதலாவதாக முன்னெடுத்த அடாவடியும்,  பூட்டிவைக்கப்பட்டிருந்த தேவாரப்பாடல்களை இராஜராஜ சோழன் காலத்தில் மீட்கப்பட்ட எதிர்வினையும் ஆகும்.

சிதம்பரம் ஆடலரசன் கோவிலில் தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாமன்னன் இராசராச சோழனுக்கு செய்தி கிடைத்தது. 
இராசராச சோழனிடம் அதை எப்படியாவது மீட்டு விடவேண்டும் என்று கேட்டுக் கொண்ட நம்பியாண்டார் நம்பியின் வேண்டுகோளை ஏற்று

அன்றைக்கு மாமன்னர் இராசராச சோழன், நடப்பு  தீட்சிதர்களின் முன்னோர் தீட்சிதர்களிடம் திருமுறைகள் முடக்கப்பட்டு இருப்பதாகக் கருதப்பட்ட அறையை திறக்கச் சொன்னபோது அன்றைய தீட்சிதர்களும் வீம்பு காட்டி அறையைத் திறக்க மாமன்னனுக்கே மறுப்பு தெரிவித்தனர். மாமன்னர் இராசராசசோழன் எவ்வளவோ மன்றாடியும் முடியவே முடியாது என்று தெரிவித்து விட்டனர்.

போகாத ஊருக்கு வழியாக இந்த நூல்களுக்கு உரிய அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வரட்டும் அவர்கள் வந்தால் அவர்கள் முன்னிலையில் இந்த அறையின் திறவுகோலைத் தருகிறோம் என்று தங்கள் அறிவாளித்தனத்தைக் காட்டி பேரறிவாளனான மாமன்னன் இராசராச சோழனிடம் நன்றாகச் சிக்கிக் கொண்டனர்.

இராசராசசோழனின் காலத்திற்கு பல நூற்றாண்டுகள் முன்பாக வாழ்ந்த சிவனியக் குரவர்களை எப்படி அழைத்து வருவார் பார்க்கலாம் என்று தெனாவெட்டு காட்டினார்கள் அக்கால சிதம்பரம் ஆடலரசன் கோயில் தீட்சிதர்கள்.

இராசராச சோழன் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் உருவங்களையும் ஐம்பொன்னால் செய்து அதை பல்லக்கில் கொண்டு வந்த வைத்து, உள்ளே தில்லைஅம்பலத்தில் சிலைவடிவல் ஆடிக்கொண்டிருப்பது நீங்கள் வழிபடும் ஆடலரசன் என்றால், இந்த சிலைகளும் அப்பர், ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரே. இல்லை இங்கே இருப்பது வெறும் சிலைகள்தாம் என்றால், உள்ளே இருப்பதும் ஆடலரசன் அல்ல. வெறுமனே சிலைதான் என்று இராசராசசோழன் வாதிட, அவரின் வாதத்திறமைக்கு பணிந்து திருமுறைகள் இருந்த அறையின் திறவுகோலை கொடுக்க ஒப்புக் கொண்டனர் அன்று தீட்சிதர்கள். 

பின்னர் குரவர்கள் மூவர்கள் சிலைக்கும் பூசையிட்டு அவற்றின் முன்னிலையில் திருமுறைகள் இருந்த அறையைத் திறக்கச் செய்தார் இராசராச சோழன். ஏடுகள் கரையான் புற்றால் மூடியிருக்க அதிர்ந்தே போனார் மாமன்னர் இராசராசசோழன். ஆனாலும் விடாது முழுமையாக கிடைத்த ஓலைகளையும் பகுதியாகக் கிடைத்த ஓலைகளையும் கொண்டு திருமுறைகளை மீட்கும் பெரும்பணியைத் தொடர்ந்து முன்னெடுத்தார் நம்பியாண்டார் நம்பியின் உதவியோடு மாமன்னர்.

பெரும்பாணன் மரபில் வந்த பாடினி ஒருவர் மூலலமாக- கிடைத்த பதிகங்களுக்கு பண்முறை அமைக்க முடியும் என்று மன்னரும் நம்பியும் கண்டறிந்து, அப்பெண்ணை ஆடலரசன் கோயிலின் பொன்னம்பலத்திற்கு, தற்போதைய தீட்சிதர்கள்- பக்தர்களின் ஆடலரசன் அருட்காட்சிக்கு ஏறிநிற்க தடை விதித்த அதே பொன்னம்பலத்திற்கு, அழைத்து வந்து அங்கு பொது மக்கள், சான்றோர் பெருமக்கள் முன்னிலையில், தேவாரப்பதிகங்களுக்கு பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.
இன்று தேவாரப் பதிகங்கள் தக்க பண்களுடம் நமக்கு கிடைக்க அதிகாரத்தை அறிவாற்றலோடு ஆவணப்படுத்தியவர் மாமன்னன் இராசராச சோழன் ஆவார்கள். 

சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை, அந்தக் கோவிலின் கட்டுப்பாடு எப்போது தீட்சிதர்களின் கீழ் வந்தது என்பது குறித்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கின்றனர். 

பக்தி இலக்கியங்களில் சொல்லப்படும் தில்லை வாழ் அந்தணர்கள் தீட்சிதர்களைக் குறிப்பதாகவே, தீட்சிதர்கள் ஆதரவு தரப்பு சொல்கிறது. 

ஆனால், தீட்சிதர்கள் என்ற சொல் திருமுறைகளிலோ, சங்க இலக்கியத்திலோ குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், 'தில்லை வாழ் அந்தணர்கள்' என்போர், இந்தத் தீட்சிதர்களின் முன்னோர்கள் என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றனர்.

தவிர, கோவில் எப்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் வந்தது என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்தக் கோவில் மீதான தங்கள் அதிகாரம் குறித்து தீட்சிதர்கள் நீண்ட காலமாகவே வழக்குகளைத் தொடுத்து, வாதாடி, பல வழக்குகளில் வென்று வந்துள்ளனர். இது தொடர்பான சுருக்கமான வரலாற்றை இப்போது பார்க்கலாம்.

இந்திய விடுதலைக்கு இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பாக சைவ சமய அறக்கட்டளைகள் தொடர்பாக சென்னை மாகாண தலைமைஅமைச்சர் பனகல் அரசர் சட்டம் கொண்டுவந்தபோது சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அதை ஏற்கவில்லை. சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய ஆளுநரை அணுகிய அவர்கள், அந்தச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஆங்கில அரசு முழுமையாக ஏற்கவில்லை. வரவு - செலவு கணக்குகளைச் ஒப்படைத்தல், கோவிலை நிர்வகிப்பதற்கு திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகள் பொருந்தும் என்று கூறியது.

இதற்குப் பிறகு, கோவிலின் நிர்வாகத்தை நடத்த ஒரு திட்டம் வகுக்க வேண்டுமென சிலர் அறநிலைய வாரியத்திடம் கோரினர். இதன்படி அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால், தீட்சிதர்கள் அந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. தென்னார்க்காடு மாவட்ட உரிமையியல் அறங்கூற்றுமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் இந்திய விடுதலைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த தென்னார்க்காடு அறங்கூற்றுமன்றம், அறநிலைய வாரியம் வகுத்த திட்டத்தை சில மாறுதல்களுடன் ஏற்கும்படி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டில், இந்தக் கோவில் தனியார் கோவில் இல்லை என்றும் பொதுக் கோவில் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், கோவில் நிர்வாகத்தில் எவ்வித முறைகேடும் இல்லை என்றாலும் நிர்வாகத்திற்கு திட்டம் கட்டாயம் எனத் தீர்ப்பளித்த அறங்கூற்றமன்றம், முந்தைய திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து, அதனை ஏற்கும்படி கூறியது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அரசு கோவில் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆனால், அதை அறங்கூற்றுமன்றம் ஏற்கவில்லை. மிக மோசமாக நிர்வாகம் இருந்தால் ஒழிய, அரசே நிர்வாகத்தை கையில் எடுக்கக்கூடாது என்று கூறி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு இந்திய விடுதலைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பதற்கான விரிவான திட்டம் இந்தத் தீர்ப்பில் தரப்பட்டது. இந்தக் காலக்கட்டம் வரை தீட்சிதர்கள் அரசின் கட்டுப்பாட்டில் கோயிலை நிருவகிக்கலாம் என்றே தீர்ப்பு அமைந்தது.

இந்திய விடுதலைக்கு நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு புதிய இந்து சமய அறநிலையத் துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்வதற்கு புதிய அரசாணை அந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. புதிய செயல் அலுவலரையும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பு அறங்கூற்றுமன்றத்தை அணுகியது.

தீட்சிதர்கள் ஒரு தனி சமய குழுவினர். அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். தீட்சிதர்கள் அல்லாத யாரும் நிர்வாகத்திலோ, பூசையிலோ ஈடுபட முடியாது. தீட்சிதர்களின் இந்தத் தனிப்பட்ட உரிமை, பல நூற்றாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை செயல் அதிகாரியின் நியமனத்தால் பறிபோகிறது. ஒரு சமயக் குழுவினரின் சொத்தை அவர்களே நிர்வகிக்கும் உரிமை அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என தீட்சிதர்கள் தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் தீட்சிதர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 1951 டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில், 'சிதம்பரம் கோவிலுக்கு ஒரு செயல் அதிகாரியை நியமித்தது சரி அல்ல. ஏற்கெனவே கோவில் நிர்வாகத்திற்கென ஒரு திட்டம் உள்ளது. அறங்கூற்றுமன்றத்தாலும் அது இறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில் பொறுப்பாளர்களாக இருக்கும் அறங்காவலர்களை நீக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந்தால்தான் நிர்வாகத்திலிருந்து அவர்களை நீக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். எனவே, நிர்வாக அதிகாரியை நியமிக்கும் ஆணை களைவுசெய்யப்பட வேண்டும்' என உயர் அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது.

அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச அறங்கூற்றமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், திடீரென அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. இதனால், அந்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1982இல் அப்போதைய ஆணையர் யு. சுப்பிரமணியம் அந்தக் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, ஏன் செயல் அலுவலரை நியமிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினார். இதனை எதிர்த்து, தீட்சிதர்கள் அறங்கூற்றமன்றம் சென்றனர். 1987இல் சூலையில் புதிதாக நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தீட்சிதர்கள் நியாயப் பேராணை மனு ஒன்றைத் பதிகை செய்தனர். ஆனால், இந்த பாட்டில், துறையின் செயலரிடம் முறையிடும் வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டில் துறையின் செயலரிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர்.

இந்த முறையீடு 2006ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் உயர் அறங்கூற்றுமன்றத்தை நாடினர். அந்த மனுவை அறங்கூற்றுவர் பானுமதி 2009ல் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பில், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. 1951லேயே தாங்கள் தனி சமயப் பிரிவினர் என உச்ச அறங்கூற்றமன்றம் ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அந்த பாடு குறித்து விவாதிக்க 'முன் தீர்ப்புத் தடை' இருக்கிறதெனக் கூறி, இரு அறங்கூற்றுவர்கள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அந்த அமர்வும், தீட்சிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டப்பிரிவு 26ஐ ஆராய்ந்த அறங்கூற்றுவர்கள், வழிபாடு நடத்தத்தான் உரிமை உள்ளதே தவிர, சொத்துக்களை நிர்வகிப்பது சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். தீட்சிதர்களின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். கோவில் நிர்வாகம் செயல் அலுவலரின் கீழ் வந்தது. உயர் அறங்கூற்றுமன்றம் தீட்சிதர்கள் வழக்கைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மூன்று தரப்பினர் உச்ச அறங்கூற்றுமன்றத்தை நாடினர். 

தீட்சிதர் தரப்பு, தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருவர், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி என மூன்று மனுக்கள் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்ச அறங்கூற்றுமன்றம் ஒன்றாக விசாரித்தது. 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு தீட்சிதர்களுக்கு ஆதரவாக அமைந்தது. தீட்சிதர்கள் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை உச்ச அறங்டகூற்றுமன்றம் இந்திய விடுதலைக்கு நான்கு ஆண்டுகள் பிந்தைய காலக்கட்டத்தில் வரையறுத்துவிட்ட பிறகு, கீழமை அறங்கூற்றுமன்றமான உயர் அறங்கூற்றுமன்றம் அதனை விசாரிக்க முடியாது என்றது உச்ச அறங்கூற்றுமன்றம்.

கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக அரசு எடுத்துக் கொண்டால், தவறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், தற்போது செயல் அலுவலரை நியமிக்கும் அரசாணையில், அவருக்கான கால வரையறை இல்லாததால், அந்த உத்தரவு செல்லாது என உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

மேலே கூறப்பட்ட 1951ஆம் ஆண்டின் தீர்ப்பு, 2014ஆம் ஆண்டின் உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே கோவிலில் அறநிலையத் துறை ஆய்வுசெய்யக்கூடாது என தீட்சிதர்கள் தரப்பு கூறுகிறது.

ஆனால், 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின்படி, தவறு நடப்பதாக தகவல் வந்தால், ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அனுமதி உண்டுதானே என்கிறது அரசு தரப்பு. 

பொன்னம்பலத்தில் நின்று பாடுவதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டு, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். தீட்சிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதனை அரசே ஊக்குவிக்கிறது. எங்களுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது என்கிறது தீட்சிதர் தரப்பு.

இது குறித்து அறநிலையத் துறையின் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவிப்பது- அவர்கள் கணக்குகளைக் காட்ட மறுக்கிறார்கள். அவர்கள் அப்படி மறுக்க முடியாது. இனி சட்டப்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதாகும்.

தில்லை ஆடலரசன் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இந்தச் சிக்கலில்- ஆங்கில ஆட்சியில் இருந்த நிலைப்பாடும், தமிழ்நாடு விரும்பும் நிலைப்பாடும் மக்கள் சார்ந்து இருப்பதையும், ஒன்றியம் சார்ந்தவர்களின் நிலைபாடு தனிக்குழுசார்ந்;து இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. 

இந்தச் சிக்கல் இப்போதைக்குத் தீர்வதற்கு வாய்ப்பில்லாமல், மதம் குறித்த தெளிவான புரிதல் தமிழ்நாட்டு அரசியலுக்கு மேற்தெளிந்தவாறு- மாறுபட்ட நிலையில் ஒன்றியத்தில் தொடரும் அரசுகள் மற்றும் சார்பாளர்களின் நிலை இருப்பதைக் காரணமாகக் கூறமுடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,274.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.