Show all

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்! இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு, மக்களாட்சித் தத்துவத்திற்கு சவக்குழி

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை நாடாளுமன்றம் வெள்ளியன்று இரவு கலைக்கப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் ஜனவரி 5-ந் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். சிங்கள பேரினவாதத்தின் உச்சகட்ட அராஜகம் மீண்டும் அரங்கேறப் போகிறது. ஈழத் தமிழ் இனத்தையே கருவறுக்க வேண்டும் என்று படுகொலை நடத்திய ராஜபக்சேவை சிங்கள இனவாத வெறியர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்காது. ராஜபக்சே கரங்களுக்கு மீண்டும் அதிகாரம் வருமானால், முதல் கட்டமாக ஈழத்தமிழர்களின் பண்பாட்டுத் தனித்தன்மையை அழிக்க கட்டமைத்த கலாசார படுகொலைகள் நடைபெறும். உலக நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஐ.நா. மன்றத்திலும், மனித உரிமை கவுன்சிலிலும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை அதிபர் அங்குள்ள தலைமை அமைச்சர் ரனில் விக்கிரமசிங்கேவை நீக்கிவிட்டு அறுதிபெரும்பான்மை இல்லாத ராஜபக்சேவை நியமித்தது ஜனநாயகத்துக்கு விரோதமாகும். அதோடு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்து இருப்பது ஜனநாயக படுகொலையாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக இந்திய அரசு தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கையில் ஜனநாயகம் தழைத்திட இந்திய அரசு விரைவாக முயல வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5ல் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். இந்தத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது.

இந்த விசயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாக தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட செய்தி, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்ட கொடூர நாட்களின் சுவடுகள் மறைந்து அமைதியான வாழ்வை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது.

இனவெறி கொண்ட ராஜபக்சேவுக்கு அதிகாரத்தை கொடுக்க முயற்சிக்கும் இச்செயல், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பெரும் தீமையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இந்திய அரசு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும், நலனுக்கும் தீங்கு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு இதைக் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சேவோடு கூட்டு சேர்ந்து கொண்டு சட்டவிரோதமாக இலங்கை அதிபர் செயல்படுவது ஈழத்தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் ஜனநாயக படுகொலையைக் கண்டிக்குமாறு இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மைத்திரி பால சிறசேனா சிங்கள பேரினவாத ஆதரவாளர். ஆட்சிக்காக அவர் தெரியாத்தனமாக, நடுநிலை வாதியான ரணில் விக்கிரமசிங்கேவுடன் ஆட்சி அமைத்து விட்டார். சிங்கள பேரினவாதியும் அரச பயங்கரவாதியுமான ராஜபக்சே செய்த தொடர் மூளைச்சலவையால், ரணில் விக்கிரமசிங்கே, மைத்திரிபால சிறிசேனாவிற்கு அருவருப்பு மனிதர் ஆகிவிட்டார். ரணில் விக்கிரமசிங்கேவை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்தவும், வளர்ந்து வரும் தமிழர் கட்சிகளை ஒடுக்கவும்- சாம, பேத, தான, தண்டம் என்று அனைத்து முயற்சிகளையும் செய்யத் தொடங்கி விட்டார் மைத்திரிபால சிறிசேனா.

இலங்கையில் சிங்களப் பேரினவாதியும், நடுநிலைவாதியும் இணைந்து நல்ஆட்சியைத் தர, நான்காவது ஈழப்போரில் இலங்கைக்கு உதவிய உலக நாடுகள் ஒரு காரணமாக அமைந்தன. ஆனால் தொடர்ந்து இலங்கையில், நல்ஆட்சி நடத்தப் படவேண்டும் என்பதற்கான நெருக்கடியை உலக நாடுகளோ, ஐநாமன்றமோ தரவும் இல்லை; தரப்போவதும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி இந்தியாவிற்கு சிங்களப் பேரினவாதிகள்தாம் நட்பினர். இலங்கையில் நடுநிலைவாதம், தமிழர் நன்மை ஆகியன குறித்து சிந்திப்பதற்கோ இலங்கை நன்முகப் படுத்துவதற்கோ சாத்தியமேயில்லை. மீறி இலங்கை பிரச்சனையில் இந்தியா தலையிட்டாலும். இலங்கையில் நடுநிலை வாதத்தையும், தமிழர் நன்மைகளையும் குழிதோண்டி புதைப்பதற்கே உதவக் கூடும். 

தமிழக, தமிழ் ஆதரவு நிலைப்பாட்டுத் தலைவர்கள் அறியாமையில், ஒவ்வொரு முறை இலங்கைப் பிரச்சனைக்கும் இந்தியா தலையீடு வேண்டும் என்று சொல்கிறார்களா? அல்லது இலங்கையில் தமிழர்கள் எப்படி நாசாமாய் போனால் என்ன என்ற நிலைப்பாட்டில் இலங்கைப் பிரச்சனையில் இந்தியத் தலையீட்டை விரும்புகிறார்களா தெரியவில்லை.

இலங்கையில் நடைபெறும் அத்தனை குழப்பத்தையும் தீர்ப்பதற்கான ஆற்றல் மையங்கள் ரணில் விக்கிரமசிங்கேவும், இலங்கை தமிழர் கட்சிகளும், இலங்கை பொது மக்களும் மட்டுமேதாம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,968.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.