Show all

முசுலீம் மன்னனுக்கு அரசு விழாவா, பாஜக போராட்டம்! கர்நாடகாவில் திப்புசுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டம், பாஜகவினர் கைது!

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா இன்று பலத்த எதிர்ப்புகளை மீறி அரசு விழாவாக நடந்து வருகிறது. ஆனால், இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில முதல்வர் குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அரசு நடத்தும் திப்பு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

அரசு தரப்பில், திப்பு சுல்தான், இந்திய விடுதலைக்காகப் போராடியவர். அவர் 4வது ஆங்கிலோ- மைசூர் போரில் இறந்தார். அவருக்கு அரசு விழா எடுப்பதில் தவறில்லை என்று கூறுகிறது.

இதற்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வாங்குவதற்காக கர்நாடக அரசு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது என்று கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, ஒரு மதத்தைச் சேர்ந்தவரை கர்நாடக அரசு கொண்டாடவில்லை. திப்பு சுல்தான் நாட்டுப் பற்று மிக்கவர், மசத்தார்பற்றவர் ஆவார். அவரின் பிறந்தநாள் கொண்டாடுவது தவறில்லை என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார்.

அரசு தரப்பு, திப்பு பிறந்தநாள் விழாவுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
முதல்வர் குமாரசாமி, திப்பு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமைதியான முறையில் நடக்கும். அதை குலைக்க நினைக்கும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

உண்மையில் வரலாறு சொல்வது என்ன? 
ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம் என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார்.
 'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலைநடுக்கம்' திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர். ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம். என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் 

அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று வேளாண்மையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
கப்பல் கட்டும் தளம் அமைத்தார்
இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.
கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.
போரில் ராக்கெட் தாக்குதல்களை பயன்படுத்தினார். இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மேல் நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் இந்தியாவின் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்துள்ளார்.

திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி. இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி எடுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,968.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.