Show all

சுவிசில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அடுத்த ஆண்டுவாக்கில் வெளியிடும் சுவிஸ்

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 40 நாட்டு பணக்காரர்களின் விவரங்களை 40 நாட்டு அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்துக்கு சுவிஸ் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

      கருப்புப் பணத்தை ஒழிப்பதாகப் போக்குக் காட்டி மகளிர் அஞ்சறைப் பெட்டியில் சேமித்து வைத்திருந்த பணத்தை வெளிக் கொணர்ந்தார் மோடி.

      இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், சுவிஸ் அரசுக்கும், 40 நாடுகளுடன்; இந்தியாவிற்கும், சுவிசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவை கடந்த புரட்டாசி மாதம் (செப்டம்பர்) ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், சுவிஸ் நாடாளுமன்ற மேலவையின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரி விதிப்புக் குழு, இந்த ஒப்பந்தம் குறித்து சனிக்கிழமை விவாதித்துள்ளது. அப்போது, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இந்தக் குழு ஒப்புதல் அளித்தது.

      மேலும், இந்த ஒப்பந்தத்தில் தனி நபர் சட்டப் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சுவிஸ் அரசு பதிகை செய்ய வேண்டும் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.

      அந்த ஒப்பந்தம், அடுத்த வாரம் தொடங்கும் சுவிஸ் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது, மேலவையில் பதிகை செய்யப்படவுள்ளது. மேலவை ஒப்புதல் அளித்த பிறகு, அடுத்த ஆண்டு முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

      அதையடுத்து, 40நாடுகளோடும் ஸ்விட்சர்லாந்து இடையே முதல் கட்ட விவரங்கள், அதிகபட்சம் ஓராண்டு இடைவெளியில் பகிர்ந்து கொள்ளப்படும்.

      அதன்படி, சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர், அவர்களின் வங்கிக் கணக்கு எண்கள், முகவரி, பிறந்த தேதி, வங்கியில் உள்ள தொகை ஆகியவை பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு அனுப்பி வைக்கும்.

உதாரணமாக, சுவிஸ் வங்கியில் இந்தியர் ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்கினால், அந்த வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை சுவிஸ் அரசுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பி வைக்கும். அதையடுத்து, அந்த விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு அனுப்பி வைக்கும். அந்த விவரங்களைக் கொண்டு இந்திய அரசு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஆளும் அரசின் கைகளில்.

      கருப்புப் பணத்தை ஒழிக்கவும், எல்லை தாண்டிய வரி ஏய்ப்பைத் தடுக்கவும், 100-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    மோடியின் கூட்டாளிகளுக்காக இந்தியா! அந்த வகையான இந்தியாவுக்காக மக்கள்! மக்களுக்காக- ஆதார், சரக்கு,சேவைவரி, ஹைட்ரோகார்பன், போன்ற ஆப்புகள்! என்கிற நிலைபாட்டு மோடி, அப்போது தேர்தலுக்கு ஒர் ஆண்டு இடைவெளியே இரு;க்கப் போகிற நிலையில், எப்படி கையாள்வார் என்பதை ஏதாவதொரு நள்ளிரவில் அறிவிப்பார். வாழ்க மோடியின் புதிய இந்தியா!

      -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,612

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.