Show all

ராகுல்காந்தி கருத்தைப் பாராட்டி சிங்கப்பூர் மாணவர்கள் பலத்த கைதட்டல்! அற்புதம்மாள் வரவேற்பு

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் கொலை தொடர்பாக முருகன் அவரது மனைவி நளினி மற்றும் சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அறங்கூற்று மன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. 

20 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் அவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டதால் தமிழக அரசு இவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்தது. நடுவண் அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. 

சில வருடங்களுக்கு முன் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா ரகசியமாக வேலூர் வந்து சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு சென்றார். அப்போது அவர் நளினியுடன் பரிவுடன் பேசிச் சென்றதாக தகவல் வெளியானது.

ஆனால் ராஜீவ் கொலை பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை கைதிகளை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர், மலேசியாவில் கடந்த 5 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தி சிங்கப்பூரில் ஐ.ஐ.எம். முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ராகுலுடன் உரையாடியவர், உங்களை நான் ஒரு கேள்வி கேட்கவேண்டும், அது உங்களை பாதித்தால் மன்னித்துவிடுங்கள். உங்கள் அப்பாவைக் கொன்றவர்களை நீங்கள் மன்னித்துவிட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார். 

சில நிமிட அமைதிக்குப் பிறகு பதிலளித்த ராகுல்-  

எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை!

நான் என் பாட்டியைக் கொன்றவர்களுடன் சிறகுப் விளையாடி இருக்கிறேன். அவர்கள் என் பாட்டியைக் கொன்றதைப் பார்த்திருக்கிறேன், அவர்கள் இறந்ததையும் பார்த்திருக்கிறேன். எனக்கு எங்கள் பாட்டி இறந்துவிடுவார் என்றும் எங்கள் அப்பா இறந்துவிடுவார் என்பதும் முன்கூட்டியே தெரியும். இந்த அரசியலில் ஒரு கொள்கையுடன் நிற்கும்போது நீங்கள் கொல்லப்படுவது தானாகவே நடந்துவிடுகிறது. அப்படிதான் எனது பாட்டியும் அப்பாவும் இறந்தார்கள். தான் இறந்துவிடுவேன் என்று எங்கள் பாட்டி என்னிடம் சொன்னார். இந்த அரசியலை உணர்ந்திருந்த நான் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று அப்பாவிடம் சொன்னேன். திருப்பெரும்புதூரில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது நான் ஹார்வார்டில் இருந்தேன். தேர்தல் கருத்துப் பரப்புதல் தொடர்பான விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தன. அது மிகவும் பிரச்னையான தேர்தல் என்பதும் எனது அப்பா தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு வருவது ஆபத்தானது என்பதும் நாங்கள் அறிந்திருந்ததே. ஹார்வார்டில் எனக்கு திடீரென்று ஒரு பேசி அழைப்பு வந்தது. எனது அப்பாவின் நண்பருடைய நண்பர் ஒருவர் அழைத்தார். 

‘ராகுல்! உனக்கு ஒரு கெட்ட செய்தி என்றார்!’. என்னால் அந்தச் செய்தியை ஊகிக்க முடிந்தது. ‘இறந்துவிட்டாரா?’ என்று கேட்டேன். ‘ஆம்!’, என்றார். அழைப்பைத் துண்டித்துவிட்டேன். அரசியலில் இருக்கும்போது கண்ணுக்குத் தெரியாத பல சக்திகளுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது. அதுபற்றிப் பொது மக்களுக்கும் தெரிவதில்லை அதனால் நம் மீது வேறு மாதிரியான பிம்பம் படிகிறது.   அப்பா இறப்பிற்குப் பிறகு மிக நீண்ட காலம் எனக்குள்ளும் பிரியங்காவிற்குள்ளும் அந்தக் கோபம் அப்படியே இருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் அது மாறிவிட்டது. 

ஈழத்தில் பிரபாகரனின் இறந்த உடலைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது உண்மையில் எனக்குள் மகிழ்ச்சிதான் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘ஏன் இவர்கள் பிரபாகரனை அவமானப்படுத்துகிறார்கள்?’ என்றுதான் தோன்றியது. அவரின் குடும்பத்திற்கும் குழந்தைகளுக்குமாக வருந்தினேன். பிரியங்காவும் அதே சிந்தனையில்தான் இருந்தாள். காரணம், எங்களால் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வன்முறை நிகழும்போதும் ஒரு குடும்பம், அதன் குழந்தைகள் அந்தச் சமூகம் என அத்தனையும் பாதிக்கப்படுகிறது. இதை நாங்கள் உணர்ந்திருந்தோம். எங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை. 

ஆம், நாங்கள் முழுவதுமாக எங்கள் அப்பாவைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டோம்” என்றார்.

அப்போது ராகுலின் கருத்தை ஆதரித்து மாணவர்கள் பலத்த கைத்தட்டல் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறுகையில், ‘என் மகன் குற்றவாளியே இல்லை நிரபராதி என்றுதான் இத்தனை ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். செய்யாத குற்றத்திற்காக எனது மகன் இத்தனை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்துவிட்டான். அதற்கு யார் பொறுப்பு? ஒரு பக்கம் என் மகன் குற்றவாளி இல்லை என்று நிருபிப்பதற்கான காரணங்கள் நிறையவே அறங்கூற்று மன்றத் தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தான் மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருக்கிற்றார். அவர்கள் மன்னிக்கட்டும் ஆனால் என் மகன் குற்றவாளியே இல்லை என்கிற என்னுடைய போராட்டம் தொடரும். என்றார். 

ராஜிவ்காந்தி கொலைக் குற்றவாளிகளாக குற்றம் சுமத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிற ஏழு பேர்களின் விடுதலை, ராகுலின் கருத்தால் சாத்தியமாகுமா என்ற எதர்பார்ப்பு எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி, தமிழக மக்கள் நடுவண் அரசை நோக்கி போராட்ட உணர்வாயுதத்தை தூக்கிப் பிடித்திருக்கும் இந்த வேளையில், ராகுல் காந்தியின் இந்த மனமாற்றம் மோடி அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்;;துள்ளது, என்பதை, பாஜக தமிழகத் தொண்டரடிப் பொடிகளின் கருத்து வெளிப்பாட்;டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

உறுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மோடி அரசு நல்ல முடிவெடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அப்படி நல்ல முடிவு கிடைக்கும் பட்சத்தில் அது ராகுல் காந்தியின் மனமாற்றத்தின் வெற்றியாகவே அமையும்.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,723.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.