Show all

ஏழு அகவைச் சிறுவனுக்கு வந்த ராணுவப்பணி அழைப்பும், தொடரும் நையாண்டிகளும்

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்துவரும் ஏழு அகவைச் சிறுவனுக்கு, ராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.

சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, ஊசுரீஸ்க்கில் உள்ள ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு ராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள ராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஊசுர்மீடியா என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதேபோல, இன்னொரு ஏழு அகவைச் சிறுவனுக்கும் கடிதம் வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறினாலும், ரஷ்ய ராணுவம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆங்கில ஆண்டு 2001ல் பிறந்தவர்களின் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, 2010ல் பிறந்தவர்களின் பட்டியலைக் குழந்தைகள் மருத்துவமனை தவறுதலாக அனுப்பிவிட்டது என்று ராணுவதிற்காக ஆட்களை சேர்க்கும் அலுவலகம், நொவோஸ்டி என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும், கடிதம் பெற்ற சிறுவன், ராணுவப்பணிக்காக சேர வேண்டாம் என்றும், அவர் ராணுவ அலுவலகத்திற்கு வராதமைக்காக தண்டிக்கப்படமாட்டார் என்றும் உறுதி செய்துள்ள அவர்கள், இந்தக் கடிதம் குறிப்பிட்ட இளைஞர்களை தயார் செய்வதற்கான வரைவு தயாரிக்க அழைக்கப்பட்ட கடிதம் மட்டுமே, பணியில் உடனடியாக சேர்வதற்கான கடிதமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனின் குடும்பத்தினர் அந்த கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது நையாண்டிப்படமாக வலம்வரத் தொடங்கியுள்ளது.

ராணுவத்தில் சேர்வதற்கான கடிதம் ஏழு வயதிலேயே வந்தடையும் என்ற நையாண்டிப்படம் மிகப்பிரபலமாக வலம் வருகிறது.

ரென் தொலைக்காட்சியிடம் பேசிய, சாஷாவின் தாத்தா, அவர்கள் உத்தரவிட்டுள்ளபடி நாங்கள், ராணுவ அலுவலகத்திற்கு செல்வோம். கட்டாய ராணுவப் பயிற்சியிலிருந்து தப்பித்தவர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

யார் மனதையும் புண்படுத்துவதற்காக, இந்த கடிதத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றும், அது ஒரு நகைச்சுவையான செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் சாஷா, ராணுவத்திற்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கப்போவது குறித்து வருத்தமாக உள்ளார். காரணம், எனக்கு ஒரே கனவுதான். காவல்துறையில் இணையவேண்டும், ராணுவத்திலல்ல என்று மாஷ் டெலெக்கிராம் என்ற ஊடகத்திடம் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து கருத்தை பதிவிட்டுள்ள ஒரு இணைய பதிவாளர், ராணுவ சேவையை முடிக்காமல், சாஷா காவல்துறையில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்பதை அவருக்கு நினைவு கூர்ந்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,633

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.