Show all

மக்களின் தேடல் என்னவாக இருந்தது நிறைவடையவிருக்கிற ஆண்டில்!

மக்களின் தேடல் என்னவாக இருந்தது என்கிற வகைக்கு 'இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள்' என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

23,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டில் கூகுள் தேடுதளத்தில் அதிகமாகத் தேடப்பட்ட விடையங்கள் குறித்து, 'இந்த ஆண்டு தேடப்பட்ட அம்சங்கள்' என்ற தலைப்பில் கூகுள் இந்தியா நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனிதன் குடும்பமாக தொடர்ந்து சமூகமாக இயங்க, முதலாவது தேவைப்பட்ட கருத்துப்பரிமாற்ற கருவியான மொழியைத், தமிழ்முன்னோர் நாடகத்தமிழ் அடுத்து இசைத்தமிழ் அதற்கடுத்து இயற்றமிழ் என்று வரிசைப்படுத்துகின்றனர்.

முதலாவதான நாடகத்தமிழ் என்பது உடலசைவு மொழியும் விளையாட்டும் ஆகும். அந்த விளையாட்டே கடந்த ஆண்டின் கூகுள்வழி மக்கள் தேடலாக அமைந்துள்ளதில் வியப்பொன்றும் இல்லை. 

மக்கள் உயிரைக் காவுவாங்கும் கரோனா குறுவி, உயிர் காக்கும் கரோனா தடுப்பூசி என உலகமே கரோனாவின் அச்சத்தில் இருந்தாலும் இந்தியர்களுக்கு துடுப்பாட்ட விளையாட்டின் மீதான தீராக்காதல் குறையவில்லை.

அந்த வகையில் முடியவிருக்கிற ஆங்கில ஆண்டில் அதிகமாகத் தேடப்பட்டது துடு;ப்பாட்ட விளையாட்டுதான். ஆம், அதிகமாகத் தேடப்பட்டதில் முதலிடத்தில் இருப்பது ஐபிஎல் டி20 போட்டிதான். அடுத்து ஐசிசி டி20 உலகக் கோப்பையாகும். கரோனா தடுப்பூசி, கோவின் போர்டல் போன்றவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

அதிகமாகத் தேடப்பட்ட விளையாட்டுகளில் ஐபிஎல் முதலிடத்தையும், கோவின் போர்டல் இரண்டாவது இடத்தையும், 3-வதாக ஐசிசி டி20 உலகக் கோப்பை, யூரோ கோப்பை, டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கோவிட் தடுப்பூசி போன்றவை முதன்மைத் தேடுதல் பட்டியலில் உள்ளன. 

திரைப்படங்கள் வரிசையில் தமிழ்த் திரையுலகில் எண்ணிமத்தளத்தில்- நடிகர் சூர்யா தயாரிப்பு, நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாலிவுட் திரைப்படம் சோர்சா, ராதே, பெல் பாட்டம் ஆகிய படங்கள் தேடப்பட்டுள்ளன. மேற்கத்திய திரைப்பட வரிசையில் காட்ஸில்லா-காங் மற்றும் எட்டர்னல்ஸ் ஆகிய படங்கள் தேடப்பட்டுள்ளன.

இவை தவிர்த்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ், கருப்புப் பூஞ்சை, ஆப்கானிஸ்தான், மேற்கு வங்கத் தேர்தல், தட்கே புயல், ஊரடங்கு போன்றவையும் முதலாவது பத்து தேடுதல் பட்டியலில் உள்ளன.

விளையாட்டுகள் வரிசையில் ஐபிஎல், டி20 உலகக் கோப்பைக்கு அடுத்து, யூரோ கோப்பை, கோபா அமெரிக்கா, விம்பிள்டன், பாராலிம்பிக்ஸ், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று ஒன்றியத்திற்கு பெருமை சேர்த்தார். இதனால் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் அதிகமாக இந்தியர்களால் தேடப்பட்டது.

வடகத்திய நடிகர் சாரூக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதால் இருவரின் பெயரும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது.

குறளிசெலாவணி (கிரிப்டோகரண்சி) புகழ் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்டுள்ளார். இவர் தவிர விக்கி கவுசால், சேனாஸ் கில், ராஜ் குந்த்ரா ஆகியோரும் இந்தியர்களின் விருப்பமாக இருந்துள்ளனர். இதுதவிர சிறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து, பஜ்ரங் பூனியா இருவரும் அதிகமாகத் தேடப்பட்டனர்.

ஹவ் டூ என்ற ஆங்கிலத் சொற்றொடர் அதிகமாக கூகுளில் தேடப்பட்டுள்ளது. உயிர்வளி அளவை உயர்த்துவது எப்படி? வீட்டிலேயே உயிர்வளி தயாரிப்பது எப்படி? கரோனா தடுப்பூசிக்கு எப்படி பதிவு செய்வது? ஆகியவை அதிகமாகத் தேடப்பட்டுள்ளன

இது தவிர எனது அருகே (நியர் மீ) எனும் சொற்றொடரும் அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. மேலும், கோவிட் தடுப்பூசி, கோவிட் பரிசோதனை, கோவிட் மருத்துவமனை ஆகியவையும் தேடுதலில் முதலிடத்தில் உள்ளன.

உயிர்வளி உருளை, சிடி ஸ்கேன் ஆகியவை இந்தியர்களால் கரோனா காலத்தில் அதிகமாகத் தேடப்பட்டுள்ளன. உணவுச் சேவையில் காலைச் சிற்றுண்டி, டேக் அவுட் ரெஸ்டாரண்ட், பார்சல் எங்கு வழங்கப்படும் என்பது அதிகமாகத் தேடப்பட்டுள்ளது. கருப்புப் பூஞ்சை குறித்தும், தலிபான்கள் குறித்தும், ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் தேடப்பட்டுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,092.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.