Show all

விஞ்ஞானிகள் உற்சாகம்! செவ்வாய் கோளில் கேட்ட மர்ம ஒலி

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கோள் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, 'இன்சைட்' என்ற விண்கலத்தை செவ்வாய் கோள் நோக்கி அனுப்பியுள்ளது.

அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஏழு மாதங்கள் ஆன நிலையில், சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் வெற்றிகரமாக தரையிறங்கி இன்று பனிரெண்டாது நாளாகும். 

செவ்வாய் கோளில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், செவ்வாய் கோளில் இருந்து ஒலியை கேட்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது. காற்றின் அதிர்வலைகளை இன்சைட் விண்கலம் ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கோளின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25எம்பிஎச் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாசாவின் புரூஷ் பெனர்ட் கூறுகையில், 'நாங்கள் செவ்வாய் கோளுக்கு அனுப்பியுள்ள இன்சைட் அதிர்வலைகளையும், ஒலியையும் பதிவு செய்யும் தொழில்நுட்பம் கொண்டது. இந்த மாதிரியான சின்ன சின்ன ஒலிகளும், கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும். தற்போது இன்சைட் பதிவு செய்து அனுப்பியுள்ள ஒலியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது ஒரு எதிர்பாராத விருந்து தான்' என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒலியை முதன்முதலாக கேட்டுள்ளதாகவும், இது மிக சாதாரணமான ஒலியாக இல்லை என்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் செவ்வாய் கோளில் தரையிறங்கி பனிரெண்டு நாட்களுக்குள்ளாகவே இன்சைட் விண்கலம், அதிசயத்தக்க வேலையை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் இயந்திரமனிதன், நிலாவில் இறங்கப் போகிறான் என்ற செய்தியைத் தொடர்ந்து, செவ்வாய் கோளில் மர்ம ஒலி கேட்டதாக அமெரிக்காவிலிருந்து தகவல் வெளியாகிறது. இனி நிலா குறித்த தகவலும், செவ்வாய் குறித்த தகவலும் போட்டி போட்டுக் கொண்டு வெளியாகும் என்று நம்பலாம்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.