Show all

3 ஆயிரம் பெயர்கள் தமிழில் மாற்றப்பட தமிழகஅரசு ஆணை! தமிழ்நாட்டில் உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பிறமொழிகளில் உள்ள பெயர்கள்

22,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இனிக்கும் தமிழில் இருந்த ஊர், சாலைகளின் பெயர்களையெல்லாம் வந்தவர்கள் எல்லாம் மாற்றினார்கள், குனிந்திருந்த தமிழனின் முதுகில் ஏறி.

சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் தமிழ்நாட்டில்; உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள் பிற மொழிகளில் மாறின. 

திராவிட இயக்க தொடக்க காலத்தில் கொஞ்சம் முயற்சித்தார்கள். கல்லக்குடி கண்ட கருணாநிதி என்றெல்லாம் பாடினார்கள். 

ஆட்சி கிடைத்ததும், அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ஆள, வட இந்தியக் கட்சிகளுக்கு மேலும் மேலும் குனிந்தார்கள். 

இப்போது தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தால்தான் உண்டு என்கிற நிலைக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆளும் அதிமுக இரண்டு கிழமைகளுக்குள், சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் என்று எல்லா மொழிகளிலும் தமிழ்நாட்டில்; உள்ள ஊர் மற்றும் சாலைகளின் பெயர்கள்  மாற்றியமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் கூறியுள்ளார். குறிப்பாக ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ள பெயர்கள் மாற்றப்படும் என்றார். அதன்படி அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான அரசாணை 2 கிழமைகளுக்குள் பிறப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

திருவல்லிக்கேணி, தூத்துக்குடி, வேதாரண்யம், சீர்காழி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், விருத்தாசலம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீவில்லிபுத்தூர், சேலம், விருதுநகர், ராமேஸ்வரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஊர்களும் பெயர் மாற்றத்தில் அடங்கலாம். வேதாரண்யத்தின் பெயர் மறைமலை என்றும், சீர்காழி பெயர் காழியூர், சிதம்பரத்தின் பெயர் தில்லை என்றும், ஸ்ரீரங்கம் திருவரங்கமாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியோ போட்டி போட்டுக் கொண்டு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஏதாவது செய்தால் சரிதான்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,995.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.