Show all

சமஸ்கிருத மொழி! உலக மொழிகள் வரிசையில்.

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமஸ்கிருத மொழி பேசுவோர் எண்ணிக்கை, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, வெறுமனே 24,821 மட்டுமே என்று தெரியவருகிறது. 
சமஸ்கிருத மொழி எப்போதும் யாருக்கும் தாய்மொழியாக இருந்தது இல்லை. அப்படி ஒரு சாராருக்கு தாய்மொழியாக சமஸ்கிருதம் இருந்திருக்குமேயானால், அந்த இனத்தில் தோன்றும் குழந்தைகள் வெறுமனே ஐந்து அகவைக்குள் கற்றுத் தேர்ந்து சமஸ்கிருத மொழியை இந்தியாவில் அதிக மக்கள் பேசும்மொழியாக நிலை நிறுத்தியிருந்திருப்பார்கள். உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் கலவை மொழியான ஹிந்தி தோன்றியிருக்கவே வாய்ப்பு இல்லாமல் போயிருந்திருக்கும்.

இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. 

ஆரியர்களின் நான்கு வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் 22ல் இதுவும் ஒன்றாகும். ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி முதலிய வட இந்திய மொழிகள் பலவற்றுள்ளும் கொஞ்சமாக சமஸ்கிருத மொழிச்சொற்கள் காணப்படுகின்றன.  தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பெரும்பாலான சமஸ்கிருத சொற்கள் சிற்சில விதிகளை அமைத்து ஏராளமான சொற்களை தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் கூறுவர்.

வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.

சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. 

நான் படித்த வைதீசுவரர் உயர்நிலைப் பள்ளியில், வைதீசுவரர் ஓரியண்டல் பள்ளி என்ற ஓர் உயர் நிலைப் பள்ளியும் இயங்கியது. அதில் சமஸ்கிருதம் கற்றுத் தரப்படும். அதில் பார்பனியப் பையன்கள் படிப்பார்கள். சில நேரங்களில் வைதீசுவரர் உயர்நிலைப் பள்ளியில் இடம் கிடைக்காமல் சில தமிழ்ப் பையன்களும் வைதீசுவரர் ஓரியண்டல் பள்ளியில் சேர்ந்து விடுவார்கள். 
அதில் படிக்கும் என் தெருவைச் சேர்ந்த நண்பர்கள் சிலரிடம் சமஸ்கிருத மொழியைப் படிக்கிற அனுவங்களைக் அவர்கள் சொன்ன செய்தி இன்னும் எனக்குள் ஒலித்துக் கெண்டிருக்கிறது.
தமிழை காக்கா போட்டு சொன்னால் சமஸ்கிருதம் என்று சிரித்தார்கள். பாடசாலகாக்கா, வண்டிகாக்கா, நண்பகாக்கா, வீடுகாக்கா என்று சொல்லி சிரியோ சிரி என்று சிரித்தார்கள். பிற்காலங்களில் நான் சமஸ்கிருதம் குறித்து அறிய முற்பட்ட போது, ஒவ்வொரு வடமொழிச் சொல்லுக்கும் வேர்ச்சொல் தமிழாகவே இருக்கும். என்பதை என்னால் உணர முடிந்தது. 

தமிழைப் பொறுத்தவரை- நாம் பேசுகின்ற, எழுதுகின்ற சொற்கள் பெரும்பான்மையும் நமது முன்னோர் நமக்குக் கற்பித்தவையே ஆகும்.  அவர்கள் எந்தச் சொல்லை எப்பொருளுக்கு,  செயலுக்குக் குறிப்பிட்டார்களோ அவற்றை அப்படியே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு வழங்குகிற முறையை வழக்கு என்கிறோம். இது இயல்பு வழக்கு தகுதி வழக்கு என இருவகைப்படும்.
ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவதற்கு எச்சொல் இயல்பாக அமைந்ததோ அச்சொல்லால் அப்பொருளைச் சுட்டிக்காட்டுவது இயல்பு வழக்கு எனப்படும். நாம் தமிழ்நாட்டில் வாழ்கிறோம். இந்த வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் அவற்றின் இயல்புநிலை கெடாமல் நின்று பொருளை உணர்த்துகின்றன. இத்தகைய இயல்பு வழக்கு 1. இலக்கணமுடையது, 2. இலக்கணப் போலி, 3. மரூஉ என மூன்று வகைப்படும்.

‘குயில் கூவுகிறது’, ‘மழை பெய்தது ’ஆகிய தொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் இயல்பாகவும் இலக்கண விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனைவருக்கும் புரியும்படியாகவும் உள்ளன. இவ்வாறு இலக்கண நெறியோடு வழங்கும் சொற்கள் இலக்கணமுடையது எனப்படும்.

இலக்கண நெறிக்குப் பொருந்தாததாக இருப்பினும் தொன்றுதொட்டு ஆன்றோர்கள் வழங்கி, இலக்கணமுடையதுபோல் ஏற்றுக்கொள்ளப்பட்டவை இலக்கணப் போலி ஆகும்.
இல்வாய் - வாயில், நகர்ப்புறம் - புறநகர், தசை - சதை, கோவில் - கோயில்
இல்வாய், நகர்ப்புறம், தசை, கோவில் ஆகிய சொற்கள் இலக்கண முறைப்படி அமைந்தவை. ஆனால், அவை வாயில், புறநகர், சதை, கோயில் என மாற்றம் பெற்று அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றன.
 
இலக்கணம் சிதைந்து வடிவம் மாறி வழங்கும் சொற்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவற்றை மரூஉ என்கிறோம்.   தொன்றுதொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று பயன்பட்டு வருவதாகும்.
சர்க்கரை - சக்கரை, பெயர் - பேர், தஞ்சாவூர் - தஞ்சை, கறிவேப்பிலை - கருவேப்பிலை

அவையில் சொல்லத் தகாத சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களைப் பயன்படுத்துவது தகுதி வழக்கு எனப்படும். இது 1. இடக்கரடக்கல், 2. மங்கலம், 3. குழூஉக்குறி என மூன்று வகைப்படும்.
பொது இடத்தில் சொல்வதற்குக் கூச்சப்படக்கூடிய சொற்களை மறைத்துக் கூறுதலை இடக்கரடக்கல் என்பர். ‘மலம் கழுவி வந்தேன்’ என்பதைக் ‘கால் கழுவி வந்தேன்’ என்று குறிப்பிடுவது இதில் அடங்கும்.
அமங்கலமான சொற்களை அப்படியே கூறாமல் மங்கலமான சொற்களைப் பயன்படுத்திக் கூறுவதாகும்.  இறந்தவரை ‘இயற்கை எய்திவிட்டார்’,  ‘அமரரானார்’  என்றும் சுடுகாட்டை ‘நன்காடு’ என்பதும் கருப்பு ஆட்டினை ‘வெள்ளாடு’ என்பதும் இவ்வகையில் அடங்கும்.

அடுத்து வருகிற ‘குழூஉக்குறி’ குறித்து பேசுவதற்காகத்தான் இத்தனை விளங்கங்களும்.
ஒரு குறிப்பிட்ட குழுவினர் மற்றவர்களுக்குப் புரியாதபடி தங்களுக்குள் மட்டும் பொருள் விளங்குமாறு அடையாளச் சொற்களைப் பயன்படுத்துவது குழூஉக்குறி என்பதாகும்.  பொற்கொல்லர் பொன்னைப் ‘பறி’ என்றும் யானைப் பாகர் ஆடையைக் ‘காரை’ என்றும் குறிப்பிடுவது இவ்வகையில் அடங்கும்.

நாடோடிகளாக பயணித்த பார்ப்பனியர்களுக்கு சொந்தமாக ஒரு மொழி எக்காலத்தும் இருந்ததில்லை. அவர்கள் எந்த மண்ணின் மக்களோடு வாழ்கிறார்களோ அந்த மண்ணின் மொழியே பார்ப்பனர்களக்கான மொழியாகும். 
அவர்கள் மொழி, இலக்கியம் என்று கிளம்பியதெல்லாம் இந்தியாவிற்கு வந்து வடபுலத்தமிழர்களோடு தொடர்பு கொண்ட போதுதான். அவர்கள் நாடோடி வாழ்க்கையை முடித்துக் கொண்டு வேதகால நாகரிகத்தை முன்னெடுத்ததும் இந்தியாவிற்கு வந்து வடபுலத்தமிழர்களோடு தொடர்பு கொண்ட போதுதான். 

அவர்கள் தம் இனத்தாரோடு மட்டும் தொடர்பு கொள்ள கண்டுபிடித்த செயற்கை மொழிதான் சமஸ்கிருதம். அவர்கள் சமஸ்கிருதத்ததை இடுகுறியாக உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழின் ஒவ்வொரு சொல்லையும் சமஸ்கிருதமாக்க பல விதிமுறைகளை உருவாக்கி தமிழிலிருந்து சமஸ்கிருத மொழியைக் கட்டமைத்தார்கள். அவர்களோடு தொடர்பில் இருந்த தமிழ்அறிஞர்கள் பலரும் சமஸ்கிருதமொழி கட்டமைப்பில் உதவியதாலேயே, தமிழர்களுக்கு அப்போது சமஸ்கிருதத்தின் மீது வெறுப்பு வரவில்லை. ஆனால் பார்ப்பனியர்களுக்கு தமிழர்கள் மீது எந்த காலத்தும் நட்பு இருந்தது இல்லை. காரணம் பார்ப்பனியர்களின் சமஸ்கிருத மொழி, வானியல், மருத்துவம், இசை, ஆடற்கலை, இறையியல் நெறிகள் என பல தமிழரின் உடமைகள் என்பதால், தங்கள் களவாணித்தனத்தை மறைக்க, தமிழர்களிடம் இருந்து தங்களை உயர்வாகக் காட்டிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள். இன்றும் இருந்து வருகிறார்கள்.
 
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட எல்லா வடமொழிச் சொற்களுக்கும் பிர என்ற முன்னொட்டு விதி முன்னெடுக்கப்பட்டு தமிழ்ச்சொற்கள் வடமொழி ஆக்கப்பட்டு இருக்கிறது. பிரவாளம், பிரமாண்டம், பிரபலம், பிரம்மா, பிரவாகம், பிரசாதம், பிரபஞ்சம், பிரவேசம், பிரமிப்பு, பிரபு, பிரகாரம், பிரணவம், என்று நிறைய சொற்கள் வடமொழியில் இருக்கின்றன. இப்படி தமிழில் இருந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு தொகுப்பு சொற்களுக்கும் ஒரு விதி முன்னெடுக்கப் பட்டிருக்கும். நடப்பில் தமிழறிஞர்கள், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் போன்ற தமிழ்ப் பேரமைப்புகளின் உதவியோடு சமஸ்கிருதத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களை தமிழ் என்று நிறுவ முடியும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.