Show all

சவுதி அரேபியாவில் கொலைவழக்கில் இளவரசருக்கு அதிரடியாக மரண தண்டனை

சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் இளவரசருக்கு அதிரடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சவுதி அரேபியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் உள்ளன. அதிலும் குறிப்பாக, கொலை, போதைப்பொருள் கடத்தல், ஆயுதத்தை காட்டி வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, அரசு துரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட வழக்குகளில், குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் யாராக இருந்தாலும், தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்த நிலையில், சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீர் ஒரு கொலை வழக்கில் சிக்கினார். 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், ரியாத்தில் பாலைவன முகாம் ஒன்றில் ஏற்பட்ட வாய்ச்சண்டையில், அல் முஹைமீது என்ற தன் நண்பரை அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் பொது நீதிமன்றத்தில் முறைப்படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தன் மீதான கொலைக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். எனவே எந்த வித சந்தேகத்துக்கும் இடமின்றி, அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2014-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த மரண தண்டனையை அப்பீல் நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் உச்சநீதி மன்றமும் உறுதி செய்தது. இந்த வழக்கில் கொல்லப்பட்ட அல் முஹைமீது குடும்பம், அவரது கொலைக்கு ஈடாக பணம் பெற மறுத்து விட்டது. இந்த வழக்கில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதையடுத்து நீதிமன்ற தீர்ப்பின்படி இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற மன்னர் சல்மான் உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து ரியாத் நகரில் இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீருக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அதிரடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பொதுவாக சவுதியில் வாளால் தலையைத் துண்டித்து மரண தண்டனையை நிறைவேற்றுவது வழக்கம். ஆனால் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் இந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 134-வது நபர் இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீர். இளவரசர் துர்க்கி பின் சவுத் அல் கபீரின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து சவுதி அரசு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நீதியை நிலை நாட்டவும் அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு, இந்த மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.