Show all

அதிபர் சிறிசேனா அவர்களே, உங்கள் முடிவு சட்ட விரோதமானது! பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா காட்டமான கடிதம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: 

நாடாளுமன்றத்தை இருபது நாட்கள் வரை முடக்கி வைப்பதாக நீங்கள் அறிவித்து இருப்பது நாட்டில் தீவிரமான மற்றும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

 

அரசின் தலைவராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிப்பதற்கு நீங்கள் முன்னுரிமை அளிக்கவேண்டும். ஏனென்றால் அவர் நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், நல்ல நிர்வாகத்திற்காகவும் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

அவருக்கு எதிராக இன்னொருவர் தனக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரனில் விக்ரமசிங்கேயின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ரனில் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதும் ஏற்கக்கூடியது அல்ல. தலைமை அமைச்சருக்கான சலுகைகள் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். அதற்கான அத்தனை உரிமைகளும் அவருக்கு உண்டு.

 

மேலும் நாடாளுமன்றத்தை முடக்கி வைப்பது என்றால் பேரவைத் தலைவரான என்னுடன் நீங்கள் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். இதுபோன்ற முடக்கம் நாட்டில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.

 

எனவே, உங்களது முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். நாடாளுமன்றத்தை முடக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, பேரவைத் தலைவருடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகே அதுதொடர்பான முடிவுகளை நீங்கள் எடுக்க முடியும் என்பதை இந்த நேரத்தில் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

 

225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு 106 உறுப்பினர்களும், ராஜபக்சே மற்றும் அவருடைய ஆதரவு கட்சிகளுக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனாவுக்கு 6 உறுப்பினர்களும் 2 சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு உறுப்பினரும் உள்ளனர். 16 உறுப்பினர்கள் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரம சிங்கேவுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ராஜபக்சே தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்: 

இலங்கையில் கடந்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்ட நிலையில் ராஜபக்சே தலைமைஅமைச்சராக நியமிக்கப்பட்டு இருப்பதில் எந்த நியாயமும் இல்லை. இதனால் கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை அத்துமீறல்கள் மீண்டும் அரங்கேறும் நிலை உருவாகி உள்ளது. நான்காவத தமிழீழ விடுதலைப் போரில், ராஜபக்சேயின் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. சிறைக்கைதிகளை கொன்றும் குவித்தது என்று குறிப்பிட்டு உள்ளது.

 

இந்த நிலையில் கொழும்பு நகரில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து கொழும்பு நகரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.

 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,955.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.