Show all

ஹாங்காங்கில் மக்கள் போராட்டம்! அதிகாரத்தை சீனாவிற்கு கையளிக்கும், ஹாங்காங் அரசின் நோக்கத்திற்கு எதிராக.

உலகம் முழுவதையும் கட்டி ஆண்ட பிரித்தானிய அரசு, ஆட்சி எளிமைப் பாட்டிற்காக, தங்கள் ஆண்ட நாடுகளில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வந்தன. பின்னர் விடுதலையும் கொடுத்து விட்டன. விடுதலையை கையில் வாங்கிய பல நாடுகளின் ஆதிக்க இனங்கள் அதே இரட்டை ஆட்சி முறையை அமுல் படுத்துகின்றன. பிரித்தானியர் இடத்தில் தங்களை இருத்திக் கொண்டு பிரித்தானியர் ஆட்சி முறையை விட அடக்கு முறை நிறைந்ததாக ஆட்சி நடத்தி வருகின்றன. அவ்வாறான நாடுகளில் விடுதலைப் போராட்டமோ அல்லது மக்கள் போராட்டமோ முன்னெடுக்கப் படுகின்றன. அந்த வகையில் இலங்கையில் நடந்தது விடுதலைப் போராட்டம். தற்போது ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.  

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹாங்காங்கும் முதலில் இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்து வந்தது. அது விடுதலை பெற்ற போது சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக மாறியது. சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது.

இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகளுடன் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஹாங்காங் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் சீனாவுடன் மட்டும் கைதிகள் பரிமாற்றத்துக்கு ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

இது தொடர்பாக ஹாங்காங் சட்டமன்றத்தில் கடந்த மாதம் விவாதம் நடந்தபோது வன்முறை தாண்டவமாடியது. உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இப்போது இந்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால் சட்டமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெற்று விட வேண்டும் என்பதில் ஹாங்காங் நிர்வாகத்தலைவர் கேரி லாம் உறுதியாக உள்ளார். புதன்கிழமை இது ஓட்டெடுப்புக்கு விடப்படுகிறது.

சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்கள்: சீனாவின் பலத்த குறைபாடுள்ள அறங்கூற்று அமைப்பின்கீழ் ஹாங்காங் தள்ளப்படும் நிலை உருவாகும், கூடவே ஹாங்காங் அறங்கூற்றுத்துறையின் தன்னாட்சி  மேலும் கெட்டுப்போகும் என்கின்றனர். இந்த நிலையில் அந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக ஹாங்காங்கில் நேற்று பல்லாயிரக் கணக்கானோர் திரண்டு வந்து வீதிகளில் இறங்கி மாபெரும் போராட்டம் நடத்தினர்.

வெள்ளை நிற உடை அணிந்து வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மதக் குழுவினர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். அவர்கள் உத்தேச சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் காரண அடிப்படையிலும், போராட்ட நடப்பு முறையிலும், சென்னைக் கடற்கரையில் நடத்தப் பட்ட சல்லிக்கட்டு ஆதரவு தமிழ்மக்கள் போராட்டம் போல இருந்ததாக பேசுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,179.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.