Show all

உலகக்கோப்பை 2019: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தனது இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது, இத்தொடரில் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இது பதினான்காவது லீக் போட்டி ஆகும். இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் . இருவரும் சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தனர். ரோகித் சர்மா 57 ரன்னில் ஆட்டமிழந்தார். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு 100 ரங்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றனர். 

இந்திய அணியில் அனைவருமே சிறப்பாக விளையாடினர். தவான் 117 ரன்களும் மற்றும் பாண்டயா அதிரடியாக விளையாடி 48 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் டோனி 27 ரன்களும் கோலி 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 116 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

அதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. முதல் 9 ஓவர்கள் தடுமாறினாலும் அதையடுத்து சிறப்பாகவே விளையாடியது ஆஸ்திரேலிய அணி. எனினும் இந்திய அணியின் பந்துவீச்சால் சீரான இடைவெளிகளில் விக்கெட் விழுந்ததால் ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.