Show all

குடும்ப நெருக்கடியில் தமிழிசை! கொப்பளித்து எழுந்த மகனின் முழக்கம்: மனஇறுக்கத்தின் உச்சம்

நேற்று பிற்பகலில் சென்னை விமான நிலையத்தில் நடந்து விட்ட ஒரு நிகழ்வை, எந்த ஊடகமும் உற்சாகமாக முன்னெடுக்க வில்லை. காரணம் பயம் அல்ல; மிகுந்த மரியாதை. தமிழிசை மிக மிக திறமையான நபர். ஆனால் அவரின் திறமையை முழுமையாக பாஜகவிற்கு வீணடிப்பதால், அவருக்கான மரியாதை அவருக்கானதல்ல. மருத்துவத் துறையில் பொறுப்போடு பயணிக்கும் அவரின் கணவருக்கானது! அதற்கு மேலாக பாரம்பரியமும், சமூக அக்கறையும், அரசியலில் நல்ல மரியாதையும், தமிழ்மீது அளப்பரிய அன்பும் கொண்டிருந்த அவருடைய அப்பா குமரி அனந்தன் அவர்களுக்கானது. ஆனால் இவற்றை தமிழிசை புரிந்து கொள்ளவேயில்லை என்பது தான் தமிழ் மக்களுக்கான, தமிழிசை மீதான வருத்தம். 

27,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே, அவரது மகன் பாஜக ஒழிக என்று முழக்கம் எழுப்பியதாக மிக மிக மெதுவாக, இன்றுதான் செய்தி வெளியாகி வருகிறது.

ஏனென்றால் ஊடகங்கள் மரியாதை நிமித்தமாக அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அந்த மரியாதை அவர் இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழகத் தலைவர் என்பதால் வந்தது அல்ல; மிக உறுதியாக. 

தமிழிசை மிகமிகத் திறமையானவர் என்பதில் இருவேறுகருத்து இருக்க முடியாது. ஆனால் அந்தத் திறமையை பாஜகவின் தாயத்து விற்கும் வேலைக்கு அர்பணித்திருப்பது தான் தமிழக மக்களுக்கு தமிழிசை மீதான மிகப் பெரிய கோபம். 

தமிழிசை மட்டும், வேறுகட்சிகளில் கூட சேர்ந்திருக்க வேண்டாம்- தனியாக ஒரு கட்சி தொடங்கியிருந்து, அவரது பாரம்பரியமான கொள்கை, அவரது திறமை ஆகியவற்றை முன்னெடுத்திருப்பாரேயானால் கூட, இன்றைக்கு ஸ்டாலினுக்குச் சரி போட்டியாக தமிழக முதல்வருக்கான களத்தில் இருந்திருப்பார். 

அவர் பாஜகவில் இணைந்தது அவர் குடும்பத்தில் யாருக்கும் எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. அவர் தனது திறமை, தனது பாரம்பரியம் ஆகியவற்றை பாஜகவில் இருந்து கொண்டு பாஜகவிற்கு காவு கொடுப்பதால் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும்; மனஇறுக்கத்திலேயே வைத்திருக்கிறார் தமிழிசை.

இவ்வாறன நிலையில்தான், நேற்று திருச்சி செல்வதற்காக மகன், மகளுடன் தமிழிசை சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது வழக்கம்போல், அவரிடம் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளைக் கேட்டனர். அவர்களின் கேள்விக்கு தமிழிசை பதிலளித்து கொண்டிருந்த சமயம், திடீரென்று அவர்களின் பின்னால் நின்று கொண்டு இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் மகன் சுகநாதன் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். தமிழிசையின் உதவியாளர் மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள் மகனை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து சென்றார்கள். 

மகன் கோபப் பட்டதற்கான காரணம்: திடீரென்று திருச்சி நிகழ்ச்சியை தான் மட்டும் இரத்து செய்து விட்டு, கட்சியின் அவசர நிகழ்வு ஒன்றுக்கு செல்ல விரும்பி குடும்பத்தாரை மட்டும் தனியே அவர்கள் திட்டமிட்டிருந்த திருச்சி நிகழ்ச்சிக்கு அனுப்ப முயன்றிருக்கிறார் தமிழிசை. 

பாஜகவால் அவமானம் தவிர தங்கள் குடும்பம் ஒன்றும் அடைந்ததில்லை என்ற மகன். மருத்துவர் சுகநாதனின் கோபம் உச்சம் அடைந்தது. அதன் பொருட்டே தன் தாய் தமிழிசைக்கு கட்சியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். தங்கள் தொழிலை மேற்கொண்டாலே எல்லையில்லாத மரியாதையும, பொருளாதார வளமையும்  பெற முடியும் என்று பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார்.  

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் கணவரும் மனைவியுமாக- மருத்துவர் சௌந்திரராஜனும், தமிழிசையும் அளித்த நேர்காணலைப் பாருங்கள். மருத்துவர் சௌந்திரராஜன், மனைவியின் மீதும், மனைவியின் பாரம்பரியத்தின் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், மனைவி சார்ந்த கட்சிப் பெருமையை மட்டும் அங்கீகரிக்காத அவரின் நேர்காணலை முழுமையாகப் பாருங்கள். மேலும் மெல்லிய சோகம் அவரிடம் இழையோடுவதையும் நேர்காணலில் கவனிக்கலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,179.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.