Show all

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தமிழர் ஒருவரின் தனி விமான நிறுவனம்

மலேசியாவின் முஸ்லிம் பயணிகளுக்காகவே தனியாக தமிழர் ஒருவர் விமான நிறுவனத்தை தொடங்கியுள்ளார். ரயானி ஏர் விமான சேவை, ஹிஜாப் அணிந்த பணிப் பெண்களுடன் நேற்று கோலாம்பூரில் இருந்து முதல் பயணத்தை தொடங்கியது.

மலேசியாவை சேர்ந்த ரவி அழகேந்திரன்,அவரது மனைவி கார்த்தியானி கோவிந்தன் ஆகியோர் இந்த விமான நிறுவனத்தைத் தோற்றுவித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் முதல் விமானச் சேவை நேற்று தொடங்கப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் 150 பயணிகளுடன் லங்காவி நகருக்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் பணிப் பெண்கள் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவார்கள். முக்கியமாக ஹலால் வகை உணவுதான் பரிமாறப்படும். மதுவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்காவி நகருக்கு மட்டும் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மலைசியாவின் மற்ற நகரங்களுக்கும் ரயானி ஏர் விமான சேவையை அளிக்கவுள்ளது.

இந்த நிறுவனத்தை தோற்றுவித்த ரவி அழகேந்திரன் கூறுகையில்,  முஸ்லிம் பயணிகளைக் கவரும் வகையில்தான் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் அவர்கள் விரும்பும் வகையில் ஹிஜாப், ஹலால் உணவு, மது நீக்கம் போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளோம். பன்றிகறி பரிமாறப்பட மாட்டாது. விமானம் புறப்படுவதற்கு முன், இஸ்லாமிய முறையிலான பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்படும். அதே வேளையில் விருப்பமுள்ள மற்ற பயணிகளும் இந்த விமானத்தில் பயணிக்கலாம்.

இதனைப் பாகுபாடான விஷயம் என்று எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. மற்ற விமான நிறுவனங்களின் சேவையில், முஸ்லிம் பயணிகளுக்கு சில சவுரிய குறைபாடுகள் ஏற்படலாம். அதனை ரயானி ஏர் நிவர்த்தி செய்யும். தற்போது 350 ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இதில் 8 பேர் பைலட்டுகள். 50 பணிப்பெண்களும் உள்ளனர்.

இதில் இஸ்லாமிய பெண்களாக இருந்தால், அவர்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிந்து பணி புரிவார்கள். மற்றவர்கள் நேர்த்தியான ஆடை அணிந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளோம். அடுத்து கோட்டா கின்னப்புலு, குட்சிங் நகரங்களுக்கு சேவை தொடங்குகிறோம். விரைவில் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் ரயானி ஏர் விமான சேவை அளிக்கவுள்ளது என்றார்.

முஸ்லிம் நாடானா மலேசியாவில் இந்த வகையிலான விமான சேவையைத் தொடங்கியுள்ள முதல் விமான நிறுவனம் ரயானி ஏர்தான். எனவே மிகப் பெரிய வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.