Show all

போரின் விபரீதம் புரிந்து கொண்ட வடகொரியா! போர் விளையாட்டைத் தொடங்கியிருக்கும் தென்கொரியா

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் வட பகுதியிலிருந்து கொரிய தீபகற்பத்திற்குச் சீனர்கள் குடியேறியதிலிருந்து கொரியாவின் ஏடறிந்த கொரிய வரலாறு தொடங்குகிறது. பல்வேறு சாம்ராஜ்யங்களின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பிறகு 108 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானிய ஏகாதிபத்தியம் கொரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் பிடி, இரண்டாம் உலகப் போரில் அது தோல்வியுறும் வரை நீடித்தது. போரில் வெற்றி ஈட்டிய நேச நாடுகளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவைத் தத்தமது செல்வாக்குப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. 38ஆம் அட்சக் கோட்டின் வடபுறம் சோவியத் யூனியனின் ஆதரவுடன் கிம் இல் சுங்-இன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியும் தென்புறம் அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஆட்சியும் அமைந்தன. வடபுறம் வடகொரியா என்றும் தென்புறம் தென்கொரியா என்று இரு நாடுகளாக ஆனது.

அமெரிக்க-தென்கொரியப் படைகள் ஒருபுறமும் வடகொரியப்படைகள் மறுபுறமும் 241 கி.மீ. நீளமுள்ள எல்லையை ராப்பகலாய்ப் பாதுகாத்துவருகின்றன. 38ஆம் அட்சக்கோடு உலகின் அதிகப் பாதுகாப்பு மிக்க எல்லைக் கோடாய்த் தொடர்கிறது.

மக்கள்தொகையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடுகளில் 52வது இடத்தில் இருக்கும் வடகொரியா, உலகின் நான்காவது பெரிய ராணுவத்தைப் பெற்றிருக்கிறது.

வடகொரியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிடுவதாகக் கணக்கிடப்படுகிறது, மேலும் கிட்டத்தட்ட அனைத்து வட கொரிய ஆண்களும் ஏதோ ஒருவகை ராணுவப் பயிற்சியைப் பெற்றிருப்பார்கள்.

வடகொரியா சலித்துப் போய் அமெரிக்கவுடன் உடன் பாட்டுக்கு வந்து அமைதிக்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் போர் பயிற்சி நடத்தி ஜப்பானை சீண்டியிருக்கிறது தென் கொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. அணு ஆயுத சோதனை நடத்தி, தென் கொரியா, ஜப்பானை மிரட்டியது. ஒருவழியாக மனம் மாறிய வடகொரியா தனது பிடிவாதத்தை கைவிட்டு அமெரிக்கா, தென் கொரியாவுடன் நட்பு பாராட்டியதால் பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய தீவான டாக்டோவில் தென்கொரியா 2 நாள் போர் பயிற்சியை தொடங்கி ஜப்பான் உடனான பழைய பிரச்னையை கிளறியிருக்கிறது. கொரிய தீபகற்பத்தில் ஜப்பானின் 35 ஆண்டு காலனி ஆதிக்கம்  ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு டாக்டோ தீவை தென்கொரியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இத்தீவை டாக்ஷிமா என்றழைக்கும் ஜப்பான், அது தனக்கு சொந்தம் என கூறி வருகிறது.

வடகொரியா பிரச்னையால் இந்த சண்டை பெரிதாக்கப்படாத நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் புகைய தொடங்கியிருக்கிறது. தென் கொரியாவின் போர் பயிற்சியில் 6 போர் கப்பல்களும், 7 விமானங்களும் ஈடுபட்டுள்ளன. போலீசார் உட்பட 40 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போர் பயிற்சிக்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான ஒத்திகை என தென் கொரிய பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.வடகொரியா சமாதானமடைந்து விட்டதால் போர் பயிற்சிகளை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்த நிலையில், தென் கொரியா இந்த 2 நாள் போர் பயிற்சியை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.