Show all

தினகரனின் அதிரடியான ஒரு மாற்று முயற்சி! அதிமுக தாங்கள்தாம் என்பதை நிலை நிறுத்த

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கை திரும்பப் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பது தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து.

அவரின் இந்தக் கருத்தை அங்கிகரித்து, அதிமுக தாங்கள் தாம் என்று மக்களிடம் மேலும் ஒரு அங்கிகாரத்ததைப் பெற தினகரன் முடிவு செய்துள்ளார். முன்னதாக இராகி.நகரில் மக்கள் ஒருமுறை இவர்களுக்கு அங்கிகாரம் கொடுத்து விட்டார்கள். ஆண்டிப்பட்டியில் அடுத்த மீண்டும் ஒருமுறை மக்களிடம் அங்கிகாரம் பெற்றுக் காட்ட முடிவு செய்து விட்டார் தினகரன். 

அதன் பொருட்டு தங்கத்தமிழ் செல்வனை களம் இறக்கியிருக்கிறார் தினகரன்.

தங்கத்தமிழ்ச் செல்வன் மட்டும் தகுதி நீக்க சட்டமன்ற உறுப்பினர்  வழக்கை திரும்பப் பெறுவது; ஒரு தொகுதிதானே என்று பாஜகவும் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்டு தேர்தல் நடத்தும், நடத்தவிடில் தொகுதி மக்கள் ஆதரவோடு போராடி இடைத்தேர்தல் நடத்த வைப்பது என்று முடிவெடுத்துள்ள நிலையில், இடைத்தேர்தல் நடத்தாவிடில் 3 லட்சம் பேரை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தங்கதமிழ்ச்செல்வன் எச்சரிக்கத் தொடங்கி விட்டார். 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற, வழக்கை திரும்பப் பெறலாமா என்னும் கருத்து கேட்கும் கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, நடுவண், மாநில அரசு அறங்கூற்றுமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டன. தகுதி நீக்க வழக்கில் பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படியே இவர்கள் முழுக்காலமும் தில்லுமுல்லு செய்தே மக்களுக்கு உதவாத பாஜக எடுபிடி ஆட்சியை நடத்தி முடிப்பார்கள். 

இதனால் வழக்கை திரும்பப்  பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் வரவேண்டும் அதில் போட்டியிட்டு நாங்கள் தாம் அதிமுக என்று மீண்டும் உங்களிடம் அங்கிகாரம் பெறவேண்டும்.

18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றாலும், செல்லாது என்றாலும் அரசுக்கு நெருக்கடி தான், அதன் பொருட்டே ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்காமல் அறங்கூற்றுவர்கள் ஆளுக்கொரு தீர்ப்பு வழங்கிவிட்டனர். இரு அறங்கூற்றுவர்கள் மாறுப்பட்ட தீர்ப்பை கூறியுள்ளதால் இது வழக்கை காலம் தாழ்த்தும் முயற்சியாக உள்ளது. 

மூன்றாவது அறங்கூற்றுவரை எப்போது நியமிப்பார்கள், எப்போது இறுதி தீர்ப்பு வரும் என்று தெரியாது. ஆகையால் வழக்கை திரும்பப் பெறுவதில் உறுதியாக உள்ளேன். என் முடிவை தினகரனிடம் சொல்லிவிட்டேன், அவரும் ஏற்றுக்கொண்டார். என்று தெரிவித்தார்.

தங்கத்தமிழ்ச் செல்வனின் இந்த ஆர்வத்தையே ஒரு யுக்தியாக வைத்து தங்கள் வலிமையை மீண்டும் ஒருமுறை நிருபிக்க முடிவெடுத்து விட்டார் தினகரன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,823.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.