Show all

ஆளும் அரசுக்கும், எலான் மாஸ்க்குக்கும் நட்டம்! இந்தியாவிற்கு பெரிய இழப்பு ஒன்றும் இல்லை

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது.

31,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகத் தெரிவித்துள்ளது எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சாரக் கார்களை விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது, காட்சியறைக்கான இடத்தைத் தேடுவதைக் கைவிட்டு உள்ளது. இந்திய அரசிடம் இருந்து குறைந்த இறக்குமதி வரிகளைப் பெறத் தவறியதால் இந்த முன்னெடுப்பில் இறங்கியுள்ளது டெஸ்லா.

அமெரிக்கா மற்றும் சீனாவில் உற்பத்தி தொழிற்சாலைகள் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் தொழிற்சாலையோ அல்லது பொருத்து தளமோ அமைக்காமல் இறக்குமதி செய்யப்பட்ட மின்சாரக் கார்களை விற்பனை செய்ய வரி விதிப்பில் தளர்வுகளைப் பெற ஒன்றிய அரசிடம் ஒரு ஆண்டிற்கும் அதிகமாகப் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கு வரும் திட்டத்தை நிறுத்தியுள்ளது டெஸ்லா.

டெஸ்லா-வின் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 100 விழுக்காடுக்கு அதிகமான கட்டணங்கள் வரியை குறைக்கும் வகைக்கு டெஸ்லா வரிச் சலுகை தொடர்ந்து கேட்டு வந்தது.

இந்தியா தனது நிதிநிலை அறிக்கையில் வரி மாற்றங்களை அறிவிக்கும் என நம்பி டெஸ்லா மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தியாவுக்கு வரும் காலக்கெடுவை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் வரிக் குறைப்புகள் எதுவும் அறிவிக்கப்படாத காரணத்தால் இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. 

பல மாதங்களாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களில் டெஸ்லா தனது காட்சியறைகள் மற்றும் சேவை மையங்களைத் திறப்பதற்கான இடத்தைத் தேடி வந்தது. ஆனால் அந்தத் திட்டமும் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லாவின் இந்த பின்;னடைவால், ஒன்றிய அரசுக்கு கிடைக்கும், கூடுதல் வரி வாய்ப்பு அமையாமல் போகிற இழப்பாகும். பெட்ரோல் வணிகத்தில் பெட்ரோல் உற்பத்தி நாடுகளை விடவும் ஒன்றிய அரசு பேரளவாக ஆதாயம் பார்த்து வருவது மாதிரி, டெஸ்லா சந்தையிலும் நிறைய வரி ஆதாயம் பார்க்கும் ஒன்றிய அரசு. டெஸ்லாவிற்கு இந்தியச் சந்தை ஆதாய வாய்ப்பு இழப்பாகும். இந்திய மக்களுக்கு வணிகத்தின் புதிய வரவில் இருந்தும், அதற்கான கூடுதல் வரியில் இருந்தும் தற்காப்பே, டெஸ்லாவின் இந்தப் பின்னடைவு ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,248.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.