Show all

உலகில் வாடிக்கையாகிவிட்ட இயற்கைச் சீற்றம்! தற்போது ஆளாகியிருக்கும் பகுதி இந்தோனேசியா ; பலி எண்ணிக்கை 384 ஆக உயர்வு

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மனிதன் எவ்வளவுதான் வளர்ந்தாலும், இயற்கை சீற்றத்திற்கு அன்றாடம் ஒவ்வொரு பகுதி பாதிக்கப் படுவது உலகின் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது பாதிக்கப் பட்டிருக்கும் பகுதி இந்தோனேசியா.  

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலி எண்ணிக்கை 384-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் டோங்கலா என்ற பகுதியை மையமாக கொண்டு நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இதை தொடர்ந்து அந்நாட்டு பேரிடர் முகமை சுனாமி எச்சரிக்கையும் விடுத்தது.

எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். சுலவேசியின் பலு பகுதியில் சுனாமி அலைகள் தாக்கின. திடீரென கடலில் எழுந்த சுனாமி பேரலைகள் ஊருக்குள் புகுந்தது. இதில் மசூதி ஒன்று பலத்த சேதமடைந்தது. மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடினர். மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தனர்.

சுமார் 6.6 அடி உயரத்துக்கு கடல் அலைகள் ஆர்ப்பரித்து எழுந்தன. ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கத்தால் இதுவரை 384 பேர் பலியாகிவுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இயற்கைப் பேரழிவால் மக்கள் வீடுகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஏராளமானோர் வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. டோங்கலா மற்றும் பலு பகுதியில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிந்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் அனைத்து தொலைத்தொடர்பு கருவிகளும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் விரிவான தகவல்கள் ஏதும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆழிப்பேரலை சுருட்டிக் கொண்டு சென்ற பெரும்பாலான உடல்கள் கரை ஓதுங்கின. இன்னும் எத்தனை பேர் ஆழிப்பேரலையில் அடித்து செல்லப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,926.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.