Show all

இறுதி வரை போராடிய வங்கதேசம்: கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா

பதினான்காவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இப்போட்டியில் சூப்பர்-4 சுற்றில் முதன் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முந்தைய லீக்கில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஷ்வர்குமார் மற்றும் சாஹல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பினர். வங்கதேச அணியில் மொமினுல் ஹக் நீக்கப்பட்டு நஸ்முல் இஸ்லாம் சேர்க்கப்பட்டார். 

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டான் தாசும், மெஹிதி ஹசனும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்தியாவுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு வங்காளதேச அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.  மெஹிதி ஹசன் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சிறப்பாக தொடங்கினாலும், இதன் பின் வந்த வீரர்களில் சவும்யா சர்கார் (33 ரன்)  தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளை இழந்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 121 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். தவான் 15(14) ரன்களிலும், அம்பத்தி ராயுடு 2(7) ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மா சற்று நிதானமாக விளையாடினர். எனினும் ரோகித் சர்மா 48(55) ரன், தினேஷ் கார்த்திக் 37(61) ரன், தோனி 36(67) ரன், ஜடேஜா 23(33) ரன் மற்றும் புவனேஷ்வர் குமாரும் 21(31) ரன் குவித்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.  இறுதியாக கேதர் ஜாதவ் 23(26) ரன்களும், குல்தீப் யாதவ் 5(5) ரன்னும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்து, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற செய்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

வங்கதேச அணியின் சார்பில் ரூபெல் ஹொசைன், மிஷிபூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், நம்சுல் இஸ்லாம், மோர்டசா, முகமதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.