Show all

சூரியனுக்கு செயற்கைகோள் அனுப்பும் நாசா! நாளை 7,25,000 கி.மீ வேகத்தில் பறந்து சென்று, சூரியனை 24 முறை சுற்றி ஆய்வு செய்யுமாம்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியன் குறித்த தகவலை திரட்டி வர, நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான 'ஹீலியஸ் 2' சூரியனை சுமார் இரண்டு கோடியே எழுபது இலட்சம் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் சூரியப் புயல் என்றும், அது ஒரு காலத்தில் உலக அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றெல்லாம் கற்பனைகளாக மட்டுமே நம்பி வரும் சூரியப்புயல் தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை. 

ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான புள்ளி செல்சியஸ் வெப்பத்தைக் கக்கும் சூரியனையே, சுமார் 'நாற்பது லட்சம் மைல்கள்' தொலைவில் சென்று ஆய்வு செய்யக்கூடிய 'பார்க்கர் சோலார் புரோப்' எனும் செயற்கைகோளை நாசா அனுப்புகிறதாம். அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 அனுப்பப்படுகிறது. புறப்படுவதற்கு  70 விழுக்காடு கால நிலை  சாதகமாக உள்ளதாக நாசா கூறி உள்ளது.

சூரியன் மற்றும் சூரிய புயல் அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் பறக்கும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி, எதிர்கொண்டு ஆய்வு செய்யும் திறன்கொண்டது என்றும் கூறப்படுகிறது. சூரியனின்  வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்யப் போகிறதாம்.

ஏனென்றால், இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் கலவைப் பொருளால் ஆன கவசத்தைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. மணிக்கு சுமார் 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாசா. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,876.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.