Show all

முஸ்லீம் பிரபாகரன் வரக்கூடும்: சிறிசேனா! இஸ்லாம் மதம், சிங்களப் பேரினவாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ப் பிரபாகரன் வந்தார்! அவரை அழிக்க உலகம் நமக்கு ஒத்துழைத்தது. அவரை அழித்து விட்டு நிம்மதியாக பத்து ஆண்டுகளைக் கடத்தினோம். நிம்மதியாக தொடரலாம் என்று பார்த்தால், இப்பொழுது முஸ்லீம் பிரபாகரன் வர நாம் காரணம் ஆகி விடுவோம் போலிருக்கிறதே. முஸ்லீம் பிரபாகரன் வந்தால், ஒட்டுமொத்த உலகமும் அவருக்கு ஒத்துழைத்து சிங்கள இனமே பூண்டற்றுப் போய் விடுமே! நடுக்கம் வந்திருக்கிறது சிறிசேனாவுக்கு.  

28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒண்ட வந்த இனமான சிங்களர்கள், அதிகார மையத்தை கைப்பற்றி, ஈழமண்ணில் நெடுங்காலமாக வாழ்ந்திருந்த தமிழ் இனத்தை தொடர்ந்து ஒடுக்கி வந்த நிலையில், கடைசி தீர்வாக தமிழினம் துப்பாக்கி எடுக்க முயன்ற போது உறுதியாக நிலைத்தவர்தான் பிரபாகரன். 

தமிழர் மண்ணில் தமிழர் ஆட்சியை அமைத்து சிறப்பாக ஆண்டு வந்தார் பிரபாகரன். தமிழர் வீரத்தால் தமிழர் மானம் உலகாளவி மீட்கப் பட்டது. சமூக ஊடகங்களில் தமிழ் கொடிகட்டி பறந்தது. இது உலகத்தார் கண்களை உறுத்தியது. சிறப்பாக உலகளாவிய பார்ப்பனிய சக்திகளுக்கு பயம் தொற்றிக் கொண்டது. இராமயணம், மகாபாரதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு உலக வரலாற்றையே திரித்து வந்து கொண்டிருக்கிற பார்ப்பனியம் பயந்தது. பாவம் இராஜிவ் காந்தி பலிகடாவாக்கப் பட்டு, ரா உளவு அமைப்புகளை எல்லாம் ஏவி, அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தை அனுப்பி விடுதலைப் புலிகள் மீது போர்ப் பிரகடனம் அறிவிக்கப் பட்டது. இந்திய வேதியியல் ஆயுதங்களோடு, உலகின் கனஇரக ஆயுதங்கள் எல்லாம் இலங்கையில் குவிக்கப் பட்டு தமிழர் ஆட்சி, உலகினர் ஒத்துழைப்போடு பத்து ஆண்டுகளுக்கு முன்னம் சிங்களரால் பிடுங்கப் பட்டது.
  
இனவழிப்பு வேலைகளில், ஒலக ஒத்துழைப்போடு வெற்றி கண்ட சிங்களர்களுக்கு, வெற்றி வெறி தலைக்கேற அடுத்த நடவடிக்கையாக மதவழிப்பு வேலையைக் கையிலெடுத்து மாட்டிக் கொண்டார்கள். இலங்கையில் குண்டுவெடிப்புக்கு பிறகு பௌத்தர், இஸ்லாமியர் ஆகிய இரு பிரிவினரிடையே தொடந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் இன்னொரு பிரபாகரன் உருவாகும் நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா புலம்பியுள்ளார். 

இலங்கையில் தேவாலயங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் கிறித்துவ தேவாலயத்தையும் பாதித்திருந்தாலும் கூட, கிறித்துவர்கள் இதில் உள்ளீடாக இல்லை.  தொடர்ந்து இலங்கையில் பவுத்த மற்றும் முஸ்லீம் பிரிவினரிடையே தாம் மோதல் வெடித்து வருகிறது. இந்த மோதல் மிகமோசமான வன்முறையாக மாறிய பின் கட்டுப்படுத்தப்பட்டது. இப்போதும் அங்கு இருபிரிவினரிடையே பதற்றம் காணப்படுகிறது. 

இது தொடர்பாக இலங்கையின் முல்லைத் தீவில் சனிக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அதிபர் மைத்ரிபால சிறீசேனா, ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கு நீடித்தால் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போல் இன்னொரு தலைவர் உருவாகும் நிலை ஏற்படும். இப்போது நாடு பிளவுபட்டிருப்பது என்பது உண்மைதான். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் பிரிந்து நிற்கிறார்கள். ஆனால் இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. நாம் பிரிந்து இருந்தால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கிவிடும். ஆகவே இலங்கையில் முஸ்லீம் பிரபாகரன் உருவாக நாமே வழியை ஏற்படுத்திவிட வேண்டாம். அது இன்னொரு உள்நாட்டு போருக்கு வித்திடும். எனவே அனைத்து சமுதாய மக்களும் ஒன்றுபட்டு முன்னேற்ற பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை தலையெடுக்க விட்டுவிடாதீர்கள்’ இவ்வாறு சிறீசேனா பேசியுள்ளார். 

இலங்கை வரலாற்றில் ஒரு சிங்களவர், சிங்கள பேரினவாதத்தின் ஆணி வேரான புத்த பிட்சுகளுக்கு அறிவுரை கூறும் பாணியில் எச்சரிக்கை விடுத்து இருப்பது, சிங்களப் பேரினவாதிகளுக்கு பயம் வந்திருப்பதைக் காட்டுகிறது. இனி இலங்கையில் அமைதி திரும்பும் வாய்ப்புகள் அதிகம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,180.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.