Show all

கனட தலைமை அமைச்சர், ஜஸ்டின் ட்ரூடோவை மோடி வரவேற்காதது, பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கனடாவில் காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்றக் கூட்டத்தில் அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்ட காரணத்தினால் அவரை மோடி வரவேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கனடா நாட்டின் தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ முதன்முறையாக ஏழு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று இரவில் டெல்லி விமானநிலையத்தில் ஜஸ்டின் ட்ரூடோ தரையிரங்கினார். அவரை, வேளாண்துறை இணையமைச்சர் கஜேந்திரசிங் சேகாவத் வரவேற்றார். அதன்பின்னர், ஞாயிற்றுக்கிழமையன்று ஆக்ராவிலுள்ள தாஜ்மாஹாலையும், திங்களன்று அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தையும், ட்ரூடோ அவரது குடும்பத்தினருடன் சுற்றிப் பார்த்தார்.

இந்த மூன்று நாள்களில் மோடி, அவரைச் சென்றுப் பார்க்கவில்லை. மேலும், அந்தந்த மாநில முதல்வர்களும் ட்ரூடோவுக்கு உரிய வரவேற்பு அளிக்கவில்லை. பொதுவாக, ஒரு நாட்டின் தலைவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களைப் பிரதமர் மோடி, விமான நிலையத்துக்குச் சென்று ஆரத்தழுவி வரவேற்பது வழக்கம். இந்தமுறை, ட்ரூடோவைப் புறக்கணித்தது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து கனடா நாட்டிற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையர் விஷ்ணு பிரகாஷ் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவின் மரியாதைக்குரிய விருந்தினர். இந்தியாவும், கனடாவும் ஜி20 நாடுகள் மற்றும் ஜி7 நாடுகளில் உறுப்பினர்களாக உள்ளன. இரு நாடுகளுக்குமிடையே உறவு நல்லமுறையில் உள்ளது. கனடா தலைமை அமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்றதில் விதிமுறைகள் சரியான முறையில்தான் பின்பற்றப்பட்டுள்ளன. உலக அளவில், ஒரு நாட்டின் தலைவரை மத்திய இணையமைச்சர் வரவேற்பதுதான் முறை. இருப்பினும், சீக்கியர்கள் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.

தமிழ்தொடர்ஆண்டு-5085 (1984) சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை ஓர் இனப்படுகொலை என்று கனடாவின் ஒன்டாரியோ மாகாண பாராளுமன்றத்தில், கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் நடைபெற்ற காலிஸ்தான் தொடர்பான கூட்டங்களில் ட்ரூடோ கலந்துகொண்டு அவர்களை புகழ்ந்து பேசியுள்ளார். அதன்காரணமாக அவருக்கான வரவேற்பை மோடி தவிர்த்திருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டின் 150வது விடுதலை நாளை முன்னிட்டு அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு அரசு கவுரவித்தது. வழக்கமாக தமிழர் பண்பாட்டை கவுரவிக்கும் கனடா அரசு தற்போது அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டியுள்ளது.

கனடா நாட்டில் தமிழ்மொழிக்கு என்று எப்போதும் தனி மரியாதை உண்டு. தமிழர்களின் கலாச்சார திருவிழாக்களை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளைத் தமிழில் வெளியிடுவது என்று உலகத் தமிழர்களை கனடா அரசு மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. என்பது குறிப்பிடத் தகுந்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,704 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.