Show all

செல்பேசி மாதிரி, சிக்கன விலையில் ஊர்திகளும் கிடைக்குமா! ஊர்திகள் உற்பத்தியில் களம் இறங்கும் எம்ஐ

சீனாவின் பெய்ஜிங் நகரில் ஊர்திகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக, சிக்கன விலை செல்பேசிகளில் பெயர்விளங்கும் எம்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சீன மின்நேரியல் (எலக்டிரானிக்ஸ்) உற்பத்தி நிறுவனமான சாவ்மி புதிதாக ஊர்திகள் உற்பத்தி நிறுவனம் ஒன்றை தொடங்க முடிவு செய்துள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த ஊர்திகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக எம்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெய்ஜிங் ஊர்திகள் உற்பத்தித் தொழிற்சாலையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்ய உள்ளதாக சாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக பெய்ஜிங்கில் தொழில்முறை தலைமை அலுவலகம், விற்பனை தலைமை அலுவலகம், என அத்தனைக்கும் பெரிய செலவுத்திட்டத்தில் அலுவலகங்கள் அமைய உள்ளனவாம்.

ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய இரண்டு தொழிற்சாலைகள் அமைய உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு 1.5 லட்சம் வாகனங்கள் உற்பத்தி ஆகும். சாவ்மி சார்பில் முதல் மின்சாரக் கார் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவ்மி நிறுவனர் மற்றும் தலைவர் லெய் ஜுன் தான் ஊர்திகள் உருவாக்கத் தொழிலையும் தற்போது கவனித்துக் கொள்கிறார்.

தற்போதைய சூழலில் இந்த வாகன தொழிற்சாலைக்கு 300 ஊழியர்கள் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 10 ஆண்டுகளுக்கு மின்சாரக் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு மட்டும் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக சாவ்மி தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் பைக் மற்றும் கார் உற்பத்தித் தொழிற்சாலையைத் தொடங்க கடந்த 5 மாதங்களாக பெரிய குழு அமைக்கப்பட்டு ஆராய்ச்சிகள், நேரடி ஆய்வுகள், தொழில் கூட்டணிகள் ஆகிய பணிகள் நடைபெற்றுள்ளன. தொழில்நுட்ப பிரிவின் மெருகேற்றுதல் பணிக்காக மட்டும் சுமார் 77.37 மில்லியன் டாலர்களை சாவ்மி முதலீடு செய்து உள்ளதாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,083.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.