Show all

தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவிலிருந்து கடிதம்! பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யுங்கள்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 7 பேருக்கும் ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன. 

இதையடுத்து, ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என சில நாள்களுக்கு முன்பு உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே தமிழக அரசு சார்பிலும் 7 பேரின் குடும்பங்கள் சார்பிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. 

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கனக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதினர். நாச்சிமுத்து சாக்ரட்டீஸ், பிரபு ராமகிருஷ்ணன், ஜெயகணேஷ், கார்த்திகேயன் தெய்வீக ராஜன் ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து, தமிழக அமைச்சரவையின் முடிவை மனிதநேயத்துடன் ஏற்கக் கோரி ஆளுநருக்குக் கடிதங்கள் அனுப்ப ஏற்பாடு செய்தனர். அருகில் உள்ள பல ஊர்களிலிருந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல பெண்கள் இதேபோல் தங்கள் பகுதிகளில் இருந்தும் பல கடிதங்கள் அனுப்பப்போவதாக உறுதி கூறினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,956.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.