Show all

அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைவி! தமிழ்ப்பெண் செபானி மந்தாகினி பாஸ்கர்

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய உலகக்கோப்பை தகுதிச் சுற்று வங்கதேசத்தில் நடந்தது. அமெரிக்க அணி, தொடர் தோல்விகளைச் சந்தித்தது. அந்தத் தொடரில் அமெரிக்கா ஒரு போட்டியில் மட்டும் வென்றது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அப்போட்டியில் சிறந்த வீராங்கனைக்கான விருதை தமிழ்ப்பெண் செபானி மந்தாகினி பாஸ்கர் வென்றார். அப்போது அவருக்கு அகவை பதினேழு.

அப்போட்டியையடுத்து அவர் மீது சக வீரர்களுக்கும் அணிக்கும் நம்பிக்கை உருவானது. அங்கிருந்து தொடங்கிய பயணத்தில் இப்போது அணித்தலைவி எனும் கூடுதல் பொறுப்பு கிடைத்துள்ளது, 

செபானி மந்தாகினி பாஸ்கர் பிறந்தது அமெரிக்காவின் சிகாகோவில். ஆனால் தனது இறுதிக் கட்ட பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்திருக்கிறார்.

பிறந்தது சிகாகோவாக இருந்தாலும் தொடக்கக் கல்வி வகுப்புகளை பல நாடுகளில் படிக்க வேண்டியிருந்தது. அதே சமயம் வீட்டில், கடற்கரையில், என விளையாடத் துவங்கி 11 அகவையில் இருந்து சவாலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்கத் தொடங்கியதாக கூறுகிறார்.

17 அகவையில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த தமிழ் பின்புலம் கொண்ட அமெரிக்காவில் பிறந்த மந்தாகினி ஆறு ஆண்டுகளில் அந்த அணிக்கு அணித்தலைவி பொறுப்பை பெற்றுள்ளார்.

கொல்கத்தாவில் வசித்தபோது 16 அகவைக்குட்பட்டோருக்கான மேற்கு வங்க அணியில் விளையாடியதாகவும், மும்பைக்கு இடம்பெயர்ந்தபோது மடுங்கா ஜிம்கானா, சிவாஜி பார்க், கர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் கல்லி கிரிக்கெட் விளையாடிதாகவும் தெரிவிக்கிறார். தமிழ்நாட்டின் 19அகவைக்கு உட்பட்டோருக்கான அணியிலும், மூத்தோர் பெண்கள் அணியிலும் விளையாடியுள்ளார்.

அவருக்கான வருத்தம்: இந்திய கடவுச்சீட்டு இல்லாதவர்கள் இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆட முடியாது எனும் சூழ்நிலை காரணமாக மாநில அளவைத் தாண்டி தேசிய அணிக்கு விளையாட முடியாமல் போனது.

ஆனால் அமெரிக்க கடவுச்சீட்டு தன்னிடம் இருந்ததும் மேலும் தான் பிறந்ததும் அமெரிக்காவில்தான் என்பதால் நேரடியாக 2011 ஐசிசி பெண்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் அமெரிக்காவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கனவுகளுக்கு உயிர் கொடுக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு அகவை17 என விவரிக்கிறார் மந்தாகினி

தனது முதல் இலக்கு உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று அங்கிருந்து இந்தியா உள்ளிட்ட அணிகளுடன் உலககோப்பையில் மோதவேண்டும். 

மந்தாகினியின் தந்தை, தாய், பெரியப்பா, தாத்தா என அனைவரும் விளையாட்டுப் பின்னணி கொண்டிருக்கிறார்கள்.

அம்மா டென்னிஸிலும் அப்பா தடகளத்திலும் ஆர்வமுடையவர்கள். தாத்தா ஜிம்னாஸ்டிக்ஸ் செய்துவந்தார். அதனால் விளையாட்டின் மீதான ஆர்வம் அவருக்கு சிறுஅகவையிலிருந்தே இருந்தது. கோல்ப், கூடைப்பந்து, கால்பந்து ஆகிய விளையாட்டுக்களும் விளையாடுவாராம்.

அணிக்குத் தலைமை ஏற்கும் பண்பு சிறுஅகவையிலேயே இருந்ததாக கூறுகிறார் 19 அகவைக்குட்பட்டோருக்கான தமிழக அணிக்கு நான் தலைமை வகித்திருக்கிறேன். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் நான் பயின்ற எம்ஓபி வைஷ்ணவா கல்லூரி அணிக்கும் நான்கு ஆண்டு தலைமை ஏற்றுள்ளேன். எனது கல்லூரி அணி நான் விளையாடிய ஐந்து ஆண்டுகளிலும் வீழ்த்தப்பட முடியாத அணியாகவே விளங்கியது. எனது அனுபவத்தை முழுமையாக தற்போது பயன்படுத்துவேன் என நம்பிக்கையுடன் சொல்கிறார் தமிழச்சி. செபானி மந்தாகினி பாஸ்கர்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.