Show all

சேலம் - சென்னை 8 வழிசாலைக்கு எதிரான வழக்குகள் பதிகை செய்யப் படுகின்றன

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை இடையிலான எட்டுவழி சாலை சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களை கடந்து சென்னையை வந்தடைகிறது. இந்தத் திட்டத்தால் வேளாண் நிலங்கள் பாதிக்கப் படுவதால், உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூர்யபிரகாசம் என்பவர் இதுதொடர்பாக மனுபதிகை செய்துள்ளார். அவர் தனது மனுவில் தெரிவித்திருப்பதாவது: 

மரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் முன் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சேலம் - சென்னை இடையிலான மாவட்டங்களில் ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. காடுகளை அழித்து தார்ச்சாலை அமைத்தால் மிகப்பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான உழவர்கள் வேலையிழப்பார்கள். இவ்வாறு சூர்யபிரகாசம் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் நடுவண் மாநில அரசுகளுக்கு கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் எட்டு வழிச்சாலை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,833.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.