Show all

பறக்க விட்ட இளைஞரை தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ஆளையே தூக்கும் மிகப்பேரளவு பட்டம்

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

07,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் அன்று ஆண்டுதோறும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தப் பட்டத்திருவிழாவில் ஆளையே தூக்கிச் சென்றுவிடக் கூடிய வகையான மிகப்பேரளவு பட்டங்களே வானில் பறக்கவிடப்படும்.

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ஆளையே தூக்கும் மிகப்பேரளவு பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எங்குமில்லாதவாறு ஆளையே தூக்கும் மிகப்பேரளவு பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.

பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

செய் அல்லது செத்துமடி எனும் முழக்கத்துடன் அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கைத்தட்டி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது யாழ்ப்பாண மக்களின் மலரும் நினைவுகள் ஆகும்.

நடப்பு ஆண்டில், யாழ்பாணத்தில், பொங்கல் விழாவிற்கு முன்பே பட்டத்திருவிழாவிற்கு அணியமாகிக் கொண்டிருக்கிற தமிழ் இளைஞர்கள் சிலரின் ஒத்திகை நிகழ்வில், ஆளையே தூக்கும் மிகப்பேரளவு பட்டம், பறக்க விட்ட இளைஞரை தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியில் இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து ஆளையே தூக்கும் மிகப்பேரளவு பட்டத்தைத் தயாரித்து உள்ளனர். அதிக காற்றும் வீசும் பகுதிக்கு வந்த அவர்கள் அந்தப் பட்டத்தை பறக்க விட்டுள்ளனர். 

அந்த சமயத்தில், முன் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விடுவதற்குள், பின் வரிசையில் இருந்த இளைஞர்கள் பட்டத்தின் கயிறை விட்டு விட்டனர். அடுத்த கணமே, காற்றின் வேகத்தோடு, முன் பக்கத்தில் கயிறைப் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞரும், பட்டத்துடன் தூக்கிச் செல்லப்பட்டார்.

வானில் அதிக உயரத்தில் அவர் பறந்ததால் அவரை கீழே இறக்க முடியாமல் நண்பர்கள் திணறினர். இந்த நிலையில் காற்றின் வேகம் சற்று தணிந்து பட்டம் கீழே இறங்கியதும் கயிற்றின் பிடியை அவர் விட்டுள்ளார். இதனால் கீழே விழுந்த அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,105.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.